நடிகர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. 


 ‘சதுரங்க வேட்டை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஹெச்.வினோத் முதல் படத்திலேயே தனது அழுத்தமான திரைக்கதை மூலமாக கவனம் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன்  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இணைந்த அவர், அந்தப்படத்தில் காவல்துறையின் பாசிட்டிவான பக்கத்தை பற்றி பேசியிருந்தார்.  ‘பவேரியா கொள்ளையர்கள்’  பற்றிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.




இதனைத்தொடர்ந்து  ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் இந்தப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.




இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்த ஹெச்.வினோத் வலிமை படத்தில் கொரோனா சூழ்நிலை காரணமாக தாங்கள் எடுக்க நினைத்ததில் பாதியை மட்டுமே எடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்தக்கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்திற்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் தொடர்பான போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.


 






பஞ்சாப்பில் நடந்த வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹெச்.வினோத் கமல் இணையும் படம் குறித்தான அறிவிப்பு வெளியாக உள்ளது. கமல்ஹாசன் தனது 68 ஆவது பிறந்தநாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில், அதற்கு பரிசளிக்கும் வகையில் இந்தப்படம் குறித்தான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தெரிகிறது.