Nagesh: அவரின் பெயரை உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை என  பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் குறித்து அவரது நினைவு நாளில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். 

 

தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் நடித்து நகைச்சுவையில் நீங்காத இடம் பிடித்தவர் நாகேஷ். சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் இணை நடிகராக நடித்ததுடன், நகைச்சுவையில் தனக்கென தனி பாதையை உருவாக்கியவர். நகைச்சுவையில் எப்படி தனக்கென தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் நடனத்திலும் நாகேஷ் பெரிதாக ரசிகர்களை ஈர்த்தவர்.

 

முதன் முதலாக 1958ஆம் ஆண்டு வெளிவந்த மனமுள்ள மறுதாரம் படத்தில் நாகேஷ் நடித்திருப்பார். பல படங்களில் நடித்து நீங்காத இடம்பிடித்த நாகேஷ் 2008ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்த நாகேஷ் வசன உச்சரிப்பு, முக பாவனை, உடல் மொழி, என அனைத்தையும் காட்டி உன்னதக் கலைஞன் என போற்றப்பட்டார். 

 

வயது முதிர்ந்த போதும் கலை மீது இருந்த ஆர்வத்தில் தொடர்ந்து நடித்து வந்த நாகேஷ், 2009ஆம் ஆண்டு மறைந்தார். நேற்று அவரது மறைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் நாகேஷின் நினைவாக ட்விட்டர் பதிவு ஒன்றை கமல்ஹாசன் பகிர்ந்திருந்தார். அதில், “நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை.

கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்​” என குறிப்பிட்டுள்ளார்.






தாயில்லாமல் நானில்லை, புன்னகை, கடல் மீன்கள், நீல மலர்கள், வானம்பாடி, மங்கள வாத்தியம், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா, அவ்வை சண்முகி, அபூர்வ ராகங்கள், மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்சதந்திரம், தசாவதாரம் என பல படங்களில் கமல்ஹாசனும் நாகேஷூம் ஒன்றாக இணைந்து நடித்ததுடன், நகைச்சுவையில் அசத்தி உள்ளனர்.