மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி பற்றி நினைவுகூர்ந்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.


கலைஞர் கருணாநிதி பற்றிய தனியார் ஊடக விழாவில் தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்கு பற்றியும் தான் அவரிடம் ரசித்தவை பற்றியும் நினைவுகூர்ந்து கமல்ஹாசன் பேசியுள்ளதாவது:


வசனம்:


“காந்திக்கு அடுத்தபடியாக இத்தனை பக்கங்கள் எழுதிய ஒரே அரசியல் தலைவர் இவர் தான். கலைஞர் வசனம் எழுதிய பேப்பரை மாடர்ன் தியேட்டரில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் வந்து “எதற்காக இப்படி எழுதினீர்கள்?” எனக் கேட்டேன். ஒரு தனி பாடமாக அது எனக்கு திகழ்ந்தது.


தனக்கு வேண்டிய காட்சியை வெகு நுணுக்கமாக, டைரக்டர் கோபிக்காமல் அவர் கேட்டு வாங்கி இருக்கிறார். அந்தக் காலத்தில் காட்சிகளை எழுத்தாளர்கள் சொல்லக் கூடாது, ஆனால் இயக்குநர் மனம் புண்படாமல் காட்சிக்கு தேவையான செய்தியை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை அவருக்கு இருந்தது. “நீ அதை கவனிச்சியா, நல்ல வேள அந்த டைரக்டர் கவனிக்கல” என சொல்லி சிரித்துக் கொள்வார்.


நினைவில் உள்ளது:


எக்ஸ்பிரஸ் வேகத்தில் திரைக்கதை எழுதுவார் என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். கலைவாணர் வீட்டில் கலைமகள் படத்துக்காக கலைஞர் வசனம் எழுதியபோது காகிதம் பறக்குமாம்.  கலைவாணர் அவற்றை எடுத்து குவித்து வைப்பாராம். இல்லற ஜோதி படத்தில் அனார்கலி எனும் வசனம் வரும், அதற்கே தனியாக போஸ்டர் போடும் வகையில் அது அவ்வளவு பாப்புலரானது. 


இல்லற ஜோதி பட வசனத்துக்கும் எனக்கும் ஒரே வயசு. 1954ஆம் ஆண்டு அதனை எழுதி இருப்பார். அனார் அனார் மறைந்து விட்டாயா.. என் மாசற்ற ஜோதியே.. என் கண்ணில் படாத உன் அழகை கல்லறைக்குள் மறைத்து விட்டார்களா...” என கலைஞர் கருணாநிதியின் வசனத்தை கடகடவென பேசி அங்கிருந்தோரை ஆச்சர்யப்படுத்தி கைத்தட்டல்களைப் பெற்ற கமல், “நான் இப்போது பேச வேண்டியதை பேப்பரில் எழுதி கொண்டு வந்துள்ளேன். ஆனால் 69 ஆண்டுகளுக்கு முன் அவர் பேசிய வசனம் நியாபகத்தில் இருக்கு” என்றார்.


எரிமலைக் குழம்பில் செய்த பேனா:


தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்,  “அவர் வசனத்தை யாராவது மறந்துட்டா எடுத்துக் கொடுக்கமளவுக்கு எனக்கு தெரியும். என்ன மாதிரி பல நடிகர்கள், அவர்களுக்கு எல்லாம் இவர் தான் கேட் பாஸ்.. நடிக்க வறீங்களா.. எங்க கலைஞர் வசனத்த சொல்லுங்க பாக்கலாம் என்பார்கள். வாய் சுத்தமாக உள்ளதா என்பதை இவர் வசனத்தை வைத்து தான் பார்ப்பார்கள்.


இப்படிப்பட்ட மாபெரும் எழுத்தாளருக்கு நான் சினிமா எழுத ஆரம்பித்த பிறகு என் கதைகளை விவாதிப்பதும், அதனை எடுத்துச் செல்வதுமாக இருந்தேன். எனக்கு தொடர்ந்து அவர் ஆசிரியராகவே இருந்தார். அவருக்கு இத்தாலி சென்று வந்தபோது, இத்தாலிய எரிமலைக் குழம்பில் செய்த பேனாவை பரிசளித்தேன்.


அந்தப் பேனாவை யாராவது அவருக்கு முன்னாடியே கொடுத்திருந்தால், பராசக்தி போல் இன்னும் பல படங்கள் பறந்திருக்கும். சரியான கைகளில் அந்தப் பேனாவை கொண்டு சேர்த்த பெருமை எனக்கு உண்டு” எனப் பேசியுள்ளார்.