பிக்பாஸ் நிகழ்ச்சியை பாராட்டிய இணையவாசி ஒருவரை இயக்குநர் மௌலி என நினைத்து நடிகர் கமல்ஹாசன் புகழ்ந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் சாந்தி, பாடகர் அசல் கோலார் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் தொடக்க முதலே இந்நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாவதால் சமூக வலைத்தளங்கள் முழுக்க பிக்பாஸ் பேச்சுக்களாகவே உள்ளது. 

தற்போது ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் ,சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். 

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த கமல், அந்த வாரத்தில் போட்டியாளர் தனலட்சுமியை டாஸ்க் ஒன்றில் தவறு செய்தவராக சித்தரித்தது, அமுதவாணனின் உடல் மொழியை கலாய்த்தது, திருநங்கை ஷிவினின் பாலினத்தை கேலி செய்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கிய அஸீமை சரமாரியாக விமர்சித்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அஸிமை போல மாற முயன்ற மற்றொரு போட்டியாளரான மணிகண்டனுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்த எபிசோட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனை பலரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் இந்திய LGBT இலக்கிய அமைப்பான Queer Chennai Chronicles  ஒருங்கிணைப்பாளர் மௌலி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை குறிப்பிட்டு, மற்றவர்களின் உடல்மொழியை கிண்டல் செய்த அசீமையும் மணியையும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ஏடிகேவை அழைத்து மற்றவர்களை செய்யும் கேலி எப்படி இருக்க வேண்டும் என சிறப்பாக சொல்லி காட்டினார்கள் என பாராட்டு தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நன்றி திரு. மௌலி. அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவையைத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். நாங்களும் உங்களுக்குப் பிறகு நானும் பெருமைமிக்க மனிதர்களின் வரிசையைச் சேர்ந்தவர்கள் என கூறினார். 

உடனடியாக இதற்கு பதிலளித்த QCC ஒருங்கிணைப்பாளர் மௌலி, தான் இயக்குநரும், நடிகருமான மௌலி இல்லை என்பதை சுட்டிக்காட்டி எனது செய்தி உங்களை சென்றடைந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதன் தொடர்ச்சியாக, எங்களிடம் - lgbtqia+ சமூகத்தில் அன்பாக இருக்க, சினிமா துறையில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக் கொண்டார். 

இதனையடுத்து இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.