தனக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.


 






அந்தப்பதிவில், “ பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க” என்று பதிவிட்டு இருக்கிறார். 


நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன்.  இவர் தனது 68 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.


அதனை முன்னிட்டு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பார்ட்டியில் கமல்ஹாசனின் நண்பர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.


 


 






 






கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்கூட்டணி இணைவதால், இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அதே போல விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.