தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் குறித்து கமலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து அவர் பேசியதை பார்க்கலாம்.


பாலிவுட்டின் தாக்கம்


இந்திய சினிமாவில் பாலிவுட் திரையுலகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது அதற்கு கொடுக்கப்படும் மதிப்பு பிறமொழித்துறையினருக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு மிக நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்தான் தெலுங்கு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம், உலக அளவில் கவனம் பெற்றதோடு பாலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.



         


 


சாடிய கங்கனா 


இதனைத்தொடர்ந்து இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா, மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கன்னட சினிமாவில் இருந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் பெரிய கவனம் பெற்றதோடு, இந்தியில் அதிக வசூலையும் குவித்தது.  


தென்னிந்திய சினிமாக்களின் இந்த வெற்றி குறித்து பேசியிருந்த நடிகை கங்கனா தென்னிந்திய சினிமாக்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர்கள் அவர்களது கலாச்சாரத்தில் வேறுன்றி இருக்கிறார்கள். அவர்களை பாலிவுட் கெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.



                         


 


இதனையடுத்து விழா மேடை ஒன்றில் பேசிய பிரபல நடிகரான சிரஞ்சீவி, விருது நிகழ்ச்சி ஒன்றிற்காக டெல்லி சென்ற போது, அங்கு தென்னிந்திய கலைஞர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் இந்திய சினிமா என்றாலே அது இந்தி சினிமா என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று வேதனை தெரிவித்து இருந்தார்.


மோதிகொண்ட பிரபலங்கள் 


இதனைத்தொடர்ந்து பேசிய கன்னட நடிகர் சுதீப் இந்தி நமது தேசிய மொழி இல்லை. பாலிவுட்டில் எடுக்கப்படும் படங்கள் தெலுங்கு, தமிழில் வெளியிடப்படுகின்றன. அவை வெற்றி பெறுவதற்காக போராடுகின்றன. ஆனால் கன்னடத்தில் தயாரிக்கப்படும் படம் எல்லா இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூற, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் எப்போதும் நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார். இதனையடுத்து பேசிய சுதீப் உங்கள் கேள்விக்கு நான் கன்னடத்தில் பதில் அளித்து இருந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா?” என்று கூறினார்.



                                                               


இது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அஜய் தேவ்கன் தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி என்று கூற சர்ச்சை முடிவுக்கு வந்தது.




இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரோஷனுக்காக டெல்லி சென்றிருக்கும் கமலிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், நான் இந்தியன்.. நீங்கள் யார்… என்னைப் பொறுத்தவரை தாஜ்மஹால் என்னுடையது. மதுரை உங்களுடையது. கன்னியாகுமரி உங்களுடையது. காஷ்மீர் எங்களுடையது” என்று பதிலளித்துள்ளார்.