இந்தியன் 2 பட பிரமோஷனுக்காக சென்ற இடத்தில் மலேசிய பிரதமர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2
கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் மிரட்டியிருப்பார். ஊழலுக்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி எடுக்கும் அதிரடி ஆக்ஷன்கள் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் கிட்டதட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரகனி, மனோபாலா, நெடுமுடி வேணு, எஸ்.ஜே.சூர்யா, மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், ஜூன் 25 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
உலகளவில் நடைபெறும் ப்ரோமோஷன்
இதனிடையே ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை,மும்பை என இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் இந்தியன் 2 படக்குழு பயணப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசிய சென்றுள்ள படக்குழுவினர் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மலேசிய பிரதமராக உள்ள டத்தோ ஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராகிமை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராகிம் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகாரப்பூர்வ பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட எனக்கு நேரம் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் திரையுலகம் தொடர்பான கருத்துக்களைப் பேசவும் பரிமாறிக்கொள்ளவும் 30 நிமிடங்கள் வாய்ப்பு கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், “டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமை சந்தித்ததில் பெருமையடைகிறேன். இருவரும் பலதரப்பட்ட பிரச்சினைகள் பற்றிய விவாதித்தோம். இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கேட்டு தெரிந்து கொண்டேன். சினிமாவில் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.