கரூரில் கருவேல மரங்களுக்கு வைக்கப்பட்ட தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக தனியார் (சைதான்யா) பள்ளி மாணவிகள் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் - தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை.


 




கருவேல மரங்களுக்கு தீ:


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் ஸ்ரீ சைதன்யா தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000 க்கும் மேலான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கு வெளியே அமைந்துள்ள தனியார் இடத்திலிருந்து கருவேல மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு குப்பைகளுடன் குப்பையாக குவித்து வைக்கப்பட்டிருந்தது அந்த குப்பையின் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதன் காரணமாக தீயில் இருந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது புகைமூட்டம் காரணமாக பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.


 


 




மருத்துவமனையில் பள்ளி மாணவிகள்:


உடனடியாக மாணவிகளை மீட்ட ஆசிரியர்கள் வையாபுரி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி தலைமையிலான வருவாய்த்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். 


 




விசாரணையில் கருவேல மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் எழுந்த புகை மூட்டம் காரணமாக மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மயங்கியதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணவிகள் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 


 




கரூரில் கருவேல மரங்களுக்கு வைக்கப்பட்ட தீயின் காரணமாக ஏற்பட்ட புகையினால் பள்ளி மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அதிகாரிகள் குழுவினர் தனியார் பள்ளியில் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.