கல்கி 2898 ஏடி


 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , திஷா பதானி  , அனா பென் , பசுபதி , ஷோபனா , துல்கர் சல்மான் , மிருணால் தாக்கூர் , ராஜமெளலி , ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வைஜயந்தி மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


கல்கி பட விமர்சனம்


பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது கல்கி படத்தின் கதை. உலகத்தின் முதலும் கடைசியுமான நகரமாக மிஞ்சியிருக்கிறது காசி. மக்கள் அனைவரும்  சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன் ) கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். ஒருபக்கம் கங்கை நதி வற்றி  கடவுள்களை கைவிட்டு பஞ்சத்திலும் பசியிலும் வாழ்கிறார்கள் மக்கள்.


மறுபக்கம் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான ’காம்பிளக்ஸ்’ என்கிற தங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் தனி உலகில் வாழ்கிறார்கள். எப்படியாவது இந்த காம்பிளக்ஸிற்குள் தேவையான பணத்தை சேர்த்து தானும் செளகரியமான ஒரு வாழ்க்கை வாழ  வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் ( பிரபாஸ்) ஒரே கனவு. 


சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கியாக பிறக்க இருக்கும் குழந்தைதான். இந்த குழந்தையை காப்பாற்றி  அஸ்வத்தமா தனது சாபத்தில் இருந்து மீண்டாரா? சுப்ரீம் யாஸ்கினின் பிராஜெக்ட் கே திட்டம் என்ன ? பைரவா தனது ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே கல்கி படத்தின் கதை.


விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது கல்கி படம். படத்தில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முதல் நாளில் கல்கி உலகளவில் ரூ 175 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


காட்சிகளை  லீக் செய்யும் நெட்டிசன்கள்


எந்த படம் வெளியானாலும் அந்தப் படத்தின் காட்சிகளை திரையரங்கத்தில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவது ட்ரெண்டாக மாறியுள்ளது. தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு கோரிக்கை வைத்தாலும் எச்சரிக்கை விடுத்தாலும் நெட்டிசன்கள் இந்த போக்கை நிறுத்துவதாக இல்லை. கல்கி படத்தைப் பொறுத்தவரை படத்தின் முக்கியமான டிவிஸ்ட் ,கமல்ஹாசன் நடித்த  காட்சிகள் என எல்லாவற்றையும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


கல்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே அனுமதி இல்லாமல் படம் தொடர்பான காட்சிகளை இணையதளத்தில் பகிர்பவர்கள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று தயாரிப்பு நிறுவனம் எச்சரித்திருந்தது. ஆனால் தற்போது பிட்டு பிட்டாக பாதிக்கு மேல் படத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள் . இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் ஒரு படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதே ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்க முடியும்.   இப்படி வீடியோக்களை வெளியிட்டு மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை கெடுக்கும் வகையில் நெட்டிசன்கள் செய்வதை பலர் கண்டித்து வருகிறார்கள்.