நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குநர் ஹெச்.வினோத்(H Vinoth) படம் இயக்குவது உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 




முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் கமல் 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் கமல்ஹாசன்(Kamal Haasan), கடைசியாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். அவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இந்த படத்தை தயாரித்திருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலிலும் ரூ.400 கோடியை தாண்டியதாக கூறப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து கமல், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கப்போவதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் கமலில் 233வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. 




கமலின் 233வது படம்


இதற்கிடையில் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச்.வினோத் தான் கமலின் 233வது படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. இதனிடையே நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் இன்று கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கலந்துரையாடினர். 


இது இருவரும் இணையும் படத்திற்கான கலந்துரையாடல் என கூறப்படுகிறது. சமூக பொறுப்பை வலியுறுத்தும் படமாக இது அமையும் என சொல்லப்படும் நிலையில் இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.