ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்த சம்பவம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியகாந்தி பயிருக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படாத நிலையில், விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அதற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இழப்பீடு அறிவித்தார்.


ஹரியானாவில் உச்சக்கப்பட்ட பரபரப்பு:


ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தங்களுக்கு போதவில்லை எனக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விவசாயிகள் முடக்கியுள்ளனர். குருக்ஷேத்ரா மாவட்டம் பிப்லி கிராமத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் தேசிய நெடுஞ்சாலை 44-ஐ முடக்கும் முடிவை அவர்கள் எடுத்தனர். 


நெரிசலை தவிர்க்க டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூரியகாந்தி பயிருக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கக் கோரி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் பிற அண்டை மாநிலங்களை சேர்ந்த விவசாய தலைவர்கள் பிப்லி தானிய சந்தையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பவந்தர் பார்பாய் யோஜனா திட்டத்தின் கீழ், 8,528 விவசாயிகள் பயன் பெறும் வகையில், 36,414 ஏக்கரில் பயிரிடப்பட்ட சூரியகாந்திக்கு  இடைக்கால நிவாரணமாக 29.13 கோடி ரூபாயை ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கடந்த சனிக்கிழமை வழங்கினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூரியகாந்தி பயிரை பவந்தர் பார்பாய் யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ப்பதாக ஹரியானா அரசு அறிவித்தது. 


போராட்டத்தில் குதித்த விவசாயிகள்:


இந்த திட்டத்தின் கீழ்தான், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விற்கப்படும் விளைபொருட்களுக்கு நிலையான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசு குறைந்த விலையில் விற்கப்படும் சூரியகாந்தி பயிருக்கு இடைக்கால நிவாரணமாக குவிண்டாலுக்கு 1,000 ரூபாய் வழங்குகிறது.


மாநில அரசு சூரியகாந்தியை குவிண்டாலுக்கு ₹6,400 விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் போது மாநில விவசாயிகளின் ஆதரவைப் பெற்ற ஒலிம்பிக் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயத்துடன் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டார்.


சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) கொள்முதல் செய்யக் கோரி பாரதிய கிசான் யூனியன் (சாருணி) தலைவர் குர்னாம் சிங் சாருனி தலைமையிலான விவசாயிகள் ஜூன் 6 ஆம் தேதி ஷாஹாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் செய்தனர். தண்ணீர் பீரங்கி மற்றும் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் கலைத்தனர்.


கலவரத்தில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் கூறி, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் உள்பட 9 பேரை பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர்.