தி லஞ்சு பாக்ஸ் திரைப்பட இயக்குநர் ரிதேஷ் பத்ராவிற்கு இன்று தனது 44 ஆவது பிறந்தநாள். மும்பையில் ஒரு மத்தியத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரிதேஷ் பத்ரா. தனது பள்ளிப் படிப்பை முடித்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்து சில காலம் பொருளாதாரா ஆலோசகராக வேலைப்பார்த்த ரிதேஷ் பத்ரா இயக்குநராக வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேற்ற மும்பைக்குத் திரும்பினார்.
குறும்படங்கள்
தொடர்ச்சியாக குறும்படங்களை இயக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார் ரிதேஷ். இவர் இயக்கிய குறும்படங்கள் கிட்டதட்ட 55 திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் சர்வதேச விழாக்களில் பரவலான அங்கீகாரம் பெற்றது. சர்வதேச கான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது.
லஞ்சு பாக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து தி சென்ஸ் ஆஃப் அன் என்டிங் என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கினார் ரிதேஷ். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நவாசுத்தீன் சித்திகை வைத்து ஃபோட்டோகிராஃப் திரைப்படத்தை இயக்கினார் ரிதேஷ் பத்ரா. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார் ரிதேஷ் பத்ரா.
தி லஞ்ச் பாக்ஸ்
தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்தை இயக்குவதற்கு முன் அந்த படத்தில் இடம்பெற்ற டப்பாவாலாக்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கினார் ரிதேஷ். இந்த ஆவணப்படம் அனைவராலும் பாராட்டப்பட அதனை மையமாக வைத்து அவர் இயக்கியப் படம் தான் தி லஞ்ச் பாக்ஸ். இர்ஃபான் கான், நிர்மத கார் , நவாசுத்தீன் சித்திக் ஆகியோர் நடித்தனர்.
சாப்பாட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒரு டெலிவரி சேவை தான் டப்பாவாலா. ஆனால் எந்த வித தொழில்நுட்பத்தின் மேற்பார்வையின் கீழ் இல்லாமல் மனிதர்களின் நேரடி பங்கீட்டில் வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு நடைமுறை இது.
ஈலா என்கிறப் பெண் தனது கணவனுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ் தவறாக சாஜன் என்கிற மனைவியை இழந்த 50 வயது ஆணிடம் சென்றடைகிறது. தனது கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டவராய் உணர்கிறார் ஈலா. தான் ஆசைய ஆசையாக சமைத்துக் கொடுக்கும் உணவிற்காக ஒரு நாள் கூட தனது கணவனிடம் இருந்து வராத பாராட்டு சாஜனிடம் இருந்து வருகிறது.இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதே தி லஞ்ச் பாக்ஸின் கதை. உலக அளவில் இந்தியத் திரைப்படங்களுக்கான அங்கீகாரத்தை கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார் ரிதேஷ் பத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.