இந்தியன் 2 உருவான விதம்
1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து இந்தியன் படம் வெளியாகியது. 54 வயதான கமல்ஹாசன் 70 வயதான சேனாபதியாக இப்படத்தில் நடித்தார். வெளிநாடுகளில் இருந்து ஒப்பனைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் துணையுடன் சேனாபதியை கண்முன் நிறுத்தினார்கள் ஷங்கர் மற்றும் கமல்.
தமிழ் திரையுலகில் அதுவரை வெளியாகிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக இந்தியன் சாதனைப் படைத்தது. இந்தியன் முதல் பாகத்தை எடுக்கும்போது இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான திட்டம் தன்னிடம் இல்லை என்று ஷங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை இயக்கும்போது தான் இந்தியன் படத்திற்கான ஐடியா அவருக்கும் தோன்றியிருக்கிறது.
இந்தியன் 2 அறிவிப்பு - 2017
இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு கமல் தான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பில் விபத்து - 2020
படப்பிடிப்பு நடந்துவந்த போது 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்புத் தளத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தார்கள். மேலும் 9 நபர்கள் காயமடைந்தார்கள். இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவின் மீது நிறைய விமர்சனங்களை எழச் செய்தது.
கொரோனா பரவல் 2020 - 2021
இதை எல்லாம் சரி செய்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தீவிரமடைந்தது. இதனால் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தடைபட்டது. இவ்வளவு பிரமாண்டமான ஒரு படத்திற்கு ஒன்றரை ஆண்டு இடைவெளி என்பது பல்வேறு சவால்களை ஏற்படுத்தக் கூடியது.
அடுத்தடுத்து நடிகர்கள் உயிரிழப்பு!
மேலும் இப்படத்தில் நடித்த நடிகர் விவேக் , நடிகர் மனோபாலா மற்றும் நெடுமுடி வேணு உள்ளிட்ட மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏற்கெனவே இவர்களின் காட்சிகள் பாதி எடுக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள காட்சிகளை டூப் போட்டும், சின்ன சின்ன மாற்றங்கள் செய்தும் எடுத்து முடித்துள்ளார் ஷங்கர்.
அனிருத் இசை
இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இன்று வரை இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் இந்தியன் 2வில் அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் படத்தின் பாடல்கள் வெளியானது வரை ஷங்கரின் இந்த முடிவு குறித்து கேள்விகள் இருந்து வருகின்றன. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவிக்கையில் “இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியபோது ரஹ்மான் 2.0 படத்திற்கான பின்னணி இசையில் பிஸியாக இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான வேலைகளை அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று தான் அனிருத்தை இசையமைப்பாளராக நியமித்தேன்” என்றார்.
படப்பிடிப்பு நிறைவு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியன் 2 மற்றும் 3ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஷங்கர்.
ஜூலை 12 ரிலீஸ்
இந்தியன் 2 படம் இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுகையில் “இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை நாங்கள் முடிவு செய்யவில்ல. விபத்து, கொரோனா போன்ற பல்வேறு காரணங்கள் இந்தப் படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்தன. கடைசிவரை இந்தப் படத்தை கைவிடாமல் இருந்ததற்காக லைகா நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். உங்கள் கையில் அதிகப்படியான சுமை இருக்கையில் அதை கைவிட்டு அடுத்த படத்திற்கு நகர்வது தான் வழக்கமாக எல்லாரும் செய்வது. ஆனால் கடைசிவரை இந்தப் படத்தை ஆதரவற்ற குழந்தையாக கைவிடக் கூடாது என்று இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா ப்ரோடக்ஷன்ஸ் முடிவு செய்தார்கள்” என்று கமல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.