நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது. இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை நாலுமுத்து காக்காச்சி ஆகிய பகுதிகளை உள்ள தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குத்தைக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும் பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தங்களது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளை காலி செய்து இறுதி நாளில் 45 நாட்களுக்குள் அல்லது ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தங்களது குடியிருப்புகளை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 75 சதவீத கருணைத் தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்படி முழு மற்றும் இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பம் பெறப்படும் என பிபிடிசி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. ஆனால் தேயிலை தோட்ட பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றும் முயற்சியில் பிபிடிசி நிர்வாகம் இறங்கி இருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக். கிருஷ்ணசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் களம் இறங்கியிருந்தனர். மேலும் அவர்களை வெளியேற்றக்கூடாது என டாக். கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு உட்பட 4 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே இத்தொழிலாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது. அவர்களுக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை தமிழக அரசு உறுதி செய்வதோடு அது தொடர்பான நீண்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இது வலுக்கட்டாயமாக வெளியேற சொல்வதாக கண்ணீர் வடித்த தொழிலாளர்களுக்கு சற்று ஆறுதலான செய்தியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அறிவிப்பாக பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட நோட்டீஸில் “மணிமுத்தாறு ஊத்து எஸ்டேட்கள் மற்றும் தொழிற்சாலைகள் அடங்கிய சிங்கம்பட்டி குழுமத்தில் உள்ள தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (MICL நிறுவனத்தின் அனைத்து முன்னாள் ευπατήσω . 1. W.P 13104/2024, 2. W.P 13375/2024, 3. W.P 150012024 10 4. WP 15012/2024 வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி 75% கருணைத் தொகையை நிறுவனம் 3 நாட்களுக்குள் உதவி தொழிலாளர் ஆணையர் தோட்டங்கள்) நாகர்கோவில் அவர்களிடம் டெபாசிட் செய்யப்படும். தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்து மீதமுள்ள 75% கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையர் (தோட்டங்கள்) நாகர்கோவில் இடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தற்போதைய நிலையை தொடரவும், சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் இருந்து தொழிலாளர்களை கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் (MOS) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது அத்தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.