மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சேலத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி சுகன்யா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
சேலத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் மலைவாழ் பகுதியான கருமந்துறை உள்ளது. மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். கரியகோவில் பகுதியில் உள்ள வேளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சேலத்தில் இருந்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் முதல் பழங்குடியின மாணவி என்ற வரலாற்றுச் சாதனையை மாணவி சுகன்யா நிகழ்த்தியுள்ளார்.
2 வயது இருக்கும்போது தாய் ராசம்மாள் இடிதாக்கி உயிரிழந்த போதும், தந்தை பிரிந்து சென்றுள்ளார். தாய்-தந்தை போல இருந்து வளர்த்த பெரியம்மா லட்சுமணன் - சின்னபொண்ணுவின் அன்பான அரவணைப்பு காரணமாகவும், அண்ணன் பூபதியின் ஊக்கம் காரணமாகவும் மாணவி சுகன்யா சாதனை படைத்துள்ளார். மலைவாழ் பகுதியான கரியகோவில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற சுகன்யா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த தொடர் பயிற்சி காரணமாக, மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றதன் வாயிலாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். சுகன்யாவுடன் உடன் பயின்ற மாணவிகள் சிலருக்கு திருமணம் ஆகி விட்ட நிலையிலும், கல்வியால் மட்டும் வாழ்க்கை உயரும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கமே இந்த உயர்வுக்கு காரணம் என பெருமிதத்துடன் கூறுவர்.
இதேபோன்று, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியிலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளியின் மகள் ராவணி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவி ராவணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நடுவனேரியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம்-சிவரஞ்சனி தம்பதியின் மகள் ராவணி அரசு மாதிரிப்பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர் இயற்பியல், கணித பாடத்தில் தலா 100 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 இடஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவி ராவணி 199.50 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய மாணவி ராவணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில உள்ளதாக தெரிவித்தார். மேலும் சிறப்பாக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.