நடிகரும் மக்கள் நீதிமைய கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி இருந்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார். இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவர் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை  தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து அவர் தனது வழக்கமான வாழ்கை முறைக்கு வந்து விடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க பயணம் சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரொனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 


இதனையறிந்த ரசிகர்களும் , மக்கள் நீதி மையம் கட்சியினரும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்தனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கமல்ஹாசன் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.