நடிகர் கமல்ஹாசன் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை எப்படி விட்டார் என்று அவரே சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் காம்பினேஷனில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ்நாடு தாண்டி பல இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்குத் திரும்பியுள்ள கமல்ஹாசனின் இந்தப்படம், கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை எப்படி விட்டார் என்று அவரே சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல் சிகரெட் விட்ட கதை:
அந்தப் பேட்டியில் முதலில் கே.எஸ்.ரவிகுமார் பேசியிருப்பார். அதில் அவர், நான் முத்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் ரஜினி சாரும் நானும் அறையில் இருந்தோம். அப்போது அவர் சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார். எனக்கும் சிகரெட் கொடுத்தார். நான் மாட்டேன் என்றேன். அவர் முன்னால் சிகரெட் குடிக்க வேண்டாம் என்பதற்காக வேண்டாம் என்றேன். நான் வெளியில் பிடித்துக் கொள்ளலாம். அப்போது அவர் முதலில் அறையில் பிடிங்க, அப்புறம் சபையில் பிடித்துக் கொள்ளலாம் என்றார். சரி என்று பிடித்தேன். அப்புறம் தான் நான் அவ்வை சண்முகி படம் எடுத்தேன். அப்போது நான் சூட்டிங் செய்யும்போது அதைப்பார்க்க எனது நண்பர்கள் வந்திருந்தனர். நான் சூட்டிங்கின்போது சிகரெட் பிடித்தேன். அதைப்பார்த்துவிட்டு அந்த நண்பர்கள் என்னை அடிக்க வந்துவிட்டனர். ஏண்டா நாமெல்லாம் கமல் சார் படத்தை தியேட்டரில் பார்த்து எப்படிக் கொண்டாடிருப்போம். இப்போ நீ அவர வச்சு படம் எடுத்தா சிகரெட்டை அவர் முன்னாலேயே பிடிப்பியான்னு திட்டினாங்க. அடி விழாவிட்டாலும் அடி விழுந்தது போல் இருந்தது. அப்புறம் அவர் முன்னாடி சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். இதனால் சிகரெட் பிடிக்கும் பழக்கமும் குறைந்தது என்றார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் தான் சிகரெட் பழக்கத்தை விட்டது பற்றியும் பேசினார். நானெல்லாம் என் இளமைப் பருவத்தில் முகத்தில் மீசையும், சிகரெட்டும் ஒன்றாக வளரும் என நினைத்தவன். ஒருநாள் நான் சிகரெட் பற்றவைத்தபோது ஒரு லைட்மேன் பார்த்துவிட்டார். அவர் அதை பிடுங்கி கீழே போட்டு நசுக்கிவிட்டு அடி விழும். நேத்துதான் அம்மாவும் நீயேன்னும் பாட்டுபாடுன மாதிரி இருந்துச்சு இதுல சிகரெட் வேறயான்னு திட்டுனாரு. அப்போதெல்லாம் யார் முன்னாலேயும் சிகரெட் பிடிக்க முடியாது. அதனால் கழிப்பறையில் மட்டும் தான் சிகரெட் பிடிக்க முடியும். அது முடியாது என்பதால் சிகரெட்டை விட்டுவிட்டேன். ரவிக்குமார் சிகரெட் பிடிப்பதை குறைத்ததற்கு இன்னும் அவரது மனைவி எனக்கு நன்றி சொல்வார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
கமலை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.