கல்கி 2898 ஏடி
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏடி. அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , துல்கர் சல்மான் , மிருணால் தாகூர் , அனா பென் , ஷோபனா , ராஜமெளலி , ராம் கோபால் வர்மா , பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிருஷ்ணரில் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப் படுத்தி சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக கல்கி படம் சாதனைப் படைத்துள்ளது. உலகளவில் இப்படம் 1000 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது.
கல்கி படக்குழுவினருக்கு நோட்டீஸ்
கல்கி படம் வெளியாகி ஒரு மாதம் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருணன் நடிகர் பிரபாஸ் , நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் படக்குழுவினருக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸில் “ இறை நம்பிக்கையும் பக்தியும் அதிகம் கொண்ட நாடு இந்தியா. சனாதன தர்மத்தில் குறிப்பிடப் பட்டுள்ள எழுத்துக்களும் அவற்றின் மதிப்பும் ஒருபோதும் திரிக்கப் பட கூடாது. கல்கி திரைப்படம் இந்து புராணத்தில் கிருஷ்ணரின் கல்கி அவதாரதம் குறிப்பிடப் பட்டதற்கு மாறான சித்தரிக்கிறது. இது இந்து புராணத்திற்கே அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் ஏற்கனவே புராணத்தில் கல்கியைப் பற்றி கூறப்பட்டது தொடர்பாக பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது . மேலும் இந்து பக்தர்கள் இடையே இப்படம் கல்கி அவதாரத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. “ என்று இந்த நோட்டீஸில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த நோட்டீஸூக்கு கல்கி படக்குழுவினர் தங்கள் தரப்பில் என்ன விளக்கமளிக்கப் போகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.