ஆடு ஜீவிதம் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று ப்ரித்விராஜூக்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆடு ஜீவிதம்
மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'தி கோட் லைஃப்' (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது. தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாராட்டு தெரிவித்த பிரபாஸ்
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் நடிகர் பிரபாஸ் ப்ரித்விராஜ் குறித்து கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான சலார் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்தது மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர்களுக்கு இடையில் நல்ல ஒரு நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படியான நிலையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் பிரபாஸ் ப்ரித்விராஜை புகழ்ந்துள்ளார். மேலும் இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜ் பிரபாஸுக்கு தனது நன்றி தெரிவித்ததோடு ‘சீக்கிரம் போர்க்களத்தில் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார். இருவரும் இணைந்து சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதை குறிப்பிட்டு அவர் இப்படி சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.