ஹாரர் படங்கள் எந்த காலகட்டத்தில் வெளியானாலும் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம் இருக்கும். அப்படி படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் பீதி அடைய செய்த ஒரு ஹாரர் படம் தான் 'யார்?' 1985ஆம் ஆண்டு கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் சக்தி - கண்ணன் இருவரின் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன், நளினி, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, கலைப்புலி சேகரன், சோமையாஜூலு, செந்தில், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். வி.எஸ். நரசிம்மனின் பின்னணி இசை மற்றும் ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருந்தது. 


 




அமானுஷ்யம் கலந்த தீய சக்திக்கும் தெய்வ சக்திக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையக் கருவாகக் கொண்டு வெளியான இப்படத்தின் கதைக்களம் மிகவும் த்ரில்லிங்காக அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று, 100 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. நடிகர் அர்ஜூன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. நளினியின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் வெற்றி படமாக அமைந்ததால் இயக்குநர் கண்ணன் தன்னுடைய பெயரை 'யார்' கண்ணன் என மாற்றிக்கொண்டார். 


'யார்' படம் குறித்து பிரபலமான தனியார் நிகழ்ச்சியான 'சாய் வித் சித்ரா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ். தாணு பேசுகையில் “மேட்னி ஷோ ஆரம்பித்து இன்டெர்வெல் விடுறதுக்குள்ளேயே ஜனங்கள் தியேட்டரில் இருந்து வெளியே ஓடி வருது. ஐயோ பயமா இருக்கு! பயமா இருக்குனு ஓடி வராங்க. வெளியில் நிக்குற ஜனங்களைக் கூட இழுத்துகிட்டு போறாங்க. அதைப் பார்த்ததும் என்னடா இதுன்னு ஒண்ணுமே புரியல. 


 



 


வெள்ளிக்கிழமை தான் படம் ரிலீஸானது. அன்னைக்கு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடலை போடுவதற்காக தூர்தர்ஷன் சென்று 2,500 ரூபாய் பணமாக கொடுத்தோம். வாலி சார் எழுதிய அந்தப் பாடலை ஒளிபரப்பியதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது சாமி பாட்டு மாதிரி இருக்கு என்றதும் தான் ஜனங்கள் மறுபடியும் படம் பார்க்க தியேட்டர் வந்தாங்க. 100 நாட்கள் வரை படம் ஓடி அதிகபட்ச வசூலைப் பெற்றது. 


80 காலகட்டத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டிய இந்த ஹாரர் படம் இன்றும் நினைக்கும் போது திகிலாக உள்ளது” எனப் பகிர்ந்துள்ளார்