கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 48 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 


"பெண்கள் 9 பேர், திருநங்கை ஒருவர் என 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற ஓரிரு மணி நேரத்தில் முதலமைச்சர் என்னையும், பொதுப்பணித்துறை அமைச்சரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி தொடர்ந்து போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.


வீடுதோறும் சென்று ஆய்வு:


அந்த வகையில், கள்ளக்குறிச்சிக்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும், இந்த சம்பவம் நடைபெற்ற 2 ஊர்களில் மருத்துவமனைக்கே வராமல் வீடுகளிலே இருந்தவர்கள் மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையிலான குழுவை அனுப்பி வீடுகள்தோறும் சென்று கண் எரிச்சல், வயிற்று எரிச்சலுடன் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் பணி செய்யப்பட்டது.


அப்படி செய்த காரணத்தினால், 55 பேர் வீடுகளில் சிகிச்சை பெறாமல் பயந்து தயங்கிய நிலையில் இருந்தவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில், இப்போது வரை இறந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆகும். 48 பேரில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில்  25 பேரும், புதுவை ஜிப்மரில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேரும், விழுப்புரத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 3 பெண்கள் மற்றும் 1 திருநங்கையும் அடங்கும்.


சிகிச்சை:


முதலமைச்சர் உடனே விளையாட்டுத்துறை அமைச்சரை நேரில் அனுப்பி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு தரச்சொன்னார். திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றக்கூடியவர்களுடன் இணைந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மருத்துவமனை 600 படுக்கைகளுடன் இருந்தாலும், இந்த பாதிப்பிற்கு உண்டானவர்களுக்காக 50 படுக்கைகள் தயாராக உள்ளது. மெத்தனாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவை படிப்படியாக செயலிழக்கத் தொடங்கும். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். முதல் ஒரு மணி நேரத்திற்கு எத்தனால் ஊசியும் என பல்வேறு வகை சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.


உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் என்ன?


மது அருந்தி நீண்ட நேரம் ஆனவர்கள் அவர்கள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியது என்று தெரிந்தும் மருத்துவமனைக்கு வரத் தயங்கியதால் உயிரிழப்புகளை அதிகம் சந்திக்க நேர்ந்தது. எனவேதான், மக்கள் நல்வாழ்வு துறை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று அழைத்து வர வேண்டியது இருந்தது. புதுவையில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரை 8 பேர் பொது வார்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ள 8 பேரில் 4 பேர் மிக மோசமாக உள்ளனர். இதன்பின்பு, சேலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு பாதிக்கப்பட்டவரையும் சந்திக்க உள்ளோம்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் எதுமாதிரியான நிவாரணங்கள் வழங்கப்படும் என்பது குறித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் இதனால் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிய உள்ளோம்."


இவ்வாறு அவர் கூறினார்.