Kalaignar Nagar: இயக்குநர் சுகன் குமார் கலைஞர் நகர் என்ற திரைப்படத்தினை 23 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளார்.
சினிமாவில் சில சாதனைகள் அவ்வப்போது படைக்கப்படுவதுண்டு. பொதுவாக சினிமாவில் சாதனை என்பது முன்பெல்லாம், ஒரு திரைப்படம் எவ்வளவு நாள் திரையரங்கில் ஓடுகிறது என்பதாக இருந்தது. அதிகப்படியான சினிமாக்கள் உருவாகத்தொடங்கிய பின்னர், சமகாலத்தில், ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது தான் சாதனையாக உள்ளது. எதிர்காலத்தில் ஓடிடி தளத்தில் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது என்பது தான் சாதனையாக பார்க்கப்படும்.
இதுபோன்ற சாதனைகள் இல்லாமல், திரைப்பட உருவாக்கத்திலும் சாதனைகள் படைத்து வருவது உள்ளூர் சினிமா தொடங்கி உலக சினிமா வரை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமா இயக்குநர்கள் இணைந்து 24 மணிநேரத்தில் பல்வேறு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து “சுயம்வரம்” எனும் திரைப்படத்தினை எடுத்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, இயக்குநர் சுகன் குமார் இதற்கு முன்னர் பிதா என்ற திரைப்படத்தினை, 23.23 மணி நேரத்தில் படமாக்கி சாதனை படைத்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அப்போது இவரது இந்த முயற்சி குறித்து கேட்டபோது, "இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான் என கூறியிருந்தார்.
இந்நிலையில், சுகன் குமார் தற்போது இயக்கியுள்ள படம், கலைஞர் நகர். நடன கலைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை 22.53 மணி நேரத்தில் இயக்கி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் நடன இயக்குநர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர் என்றால் சினிமா ரசிகர்களின் பதில் ராதாகிருஷ்ணன் என்பது தான். அவரது இயக்கத்தி, ஏற்கனவே ”ஒத்த செருப்பு, இரவின் நிழல்” போன்ற படங்களை இயக்கியிருந்தார். வித்தியாசமான முயற்சியில் சிறந்த கதைக்களத்துடன் உருவாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு சாம் மெண்டீஸ் இயக்கத்தில் முதலாவது உலகப்போரினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ”1917” என்ற திரைப்படம். ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது போல் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்ட சினிமா தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய இடம் பிடிக்கும் படமாக 1917 இருக்கும்.