Kalaignar 100 Rajini: கலைஞர் 100 விழாவில் கருணாநிதியை புகழ்ந்து ரஜினி பேசியதால், கலைஞருக்கு எதிராக சிவாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கலைஞர் 100 விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, ”சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டாராக்கியவர் கருணாநிதி. சாதாரணமாக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப்படங்கள் கொடுக்க வைத்தவர், கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர்களை உருவாக்கி இருக்கலாம்” என ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் கருணாநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவாஜி கணேசன் பேசியது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தி குறிப்பில், ” கருணாநிதி இப்போது என்ன கூறுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது. நடிகர்கள் அரசியல் பேசலாமா என்று அவர் கேட்கிறார்.
கருணாநிதி மட்டும்தான் அரசியல் பேச வேண்டும் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அவர் வசனத்தை நான் பேசியதால் தானே கருணாநிதிக்கு பெருமை ஏற்பட்டது. எனக்கும், எம்ஜிஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெரியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் இந்த பேச்சை ட்ரோல் செய்து வரும் சிலர், கருணாநிதி வசனம், கதை எழுதிய உளியின் ஓசை உள்ளிட்ட படங்களில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்று கேட்டதுடன், சிவாஜிகணேசனுக்கு கருணாநிதி இல்லாமல் வெற்றியை கொடுத்தது கட்டபொம்மன் படம் தான் என்றும், அதற்கு கருணாநிதி வசனம் எழுதவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரே படத்தின் மூலம் சிவாஜியை கருணாநிதியை உருவாக்கினார் என்றார், நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகு ஏன் இன்னொரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை என்றும், தனது மகன்களை ஏன் நல்ல நடிகர்களாக உருவாக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கலைஞர் 100 விழாவில் ரஜினி பேசிய சில கருத்துகள் சிவாஜி, கருணாநிதிக்கு இடையிலாத விவாதத்தையே எழுப்பியுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.