தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்குள் நகர்த்தி சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இந்த தமிழ் சினிமாவுக்குள் அறிமுக படுத்திக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் '16 வயதினிலே'. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என மூவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்த ஒரு திரைப்படம். இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு தூணாக இருந்தவர் இசைஞானி இளையராஜா.
16 வயதினிலே படத்தில் ஒரு பிரதான கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தாலும் 46 ஆண்டுகளை கடந்த பின்பு இன்றும் நினைவில் இருக்கும் ஒரு கேரக்டர் தான் அதில் வரும் டாக்டர். அவர் ஸ்ரீதேவியை 'மயில்ல்ல்' என அழைப்பது இன்று வரை பிரபலம். அதன் ரீச் வேற லெவலில் இருந்தது. அவர் தான் நடிகர் சத்யஜித். இவர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'நாம் பிறந்த மண்' படத்தின் மூலம் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதில் ஒரு துணை கதாபாத்திரமாக தலைகாட்டியிருப்பார்.
சிறு வயது முதலே கலை மீது இருந்த தீர்த்த காதலால் குடும்பத்தை எதிர்த்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பயிற்சி பெற்றார். நடிகர் சத்யஜித், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் 1977ம் ஆண்டுக்கான தங்க பதக்கம் பெற்றவர். அதற்காக அவரின் புகைப்படம் பத்திரிகையில் வந்ததை பார்த்துவிட்டு அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. மெலிந்த உருவமும், உயரமான தேகமும், அடர்த்தியான முடியும், பணக்கார தோற்றத்தில் இருந்த சத்யஜித் ஆடிஷனில் கலந்து கொண்டதும் அவர் தான் அந்த டாக்டர் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என பாரதிராஜா செலக்ட் செய்துள்ளார். நான் தான் டப்பிங் பேசுவேன் என அடம் பிடித்து அப்படத்தில் டப்பிங் செய்துள்ளார். தமிழ் தெரியாத வேற்று மொழிகாரர் எப்படி பேசுவரோ அதை போன்ற கொஞ்சு தமிழில் அவர் மயில்ல்ல்... என கொஞ்சியதும், நுனி நாக்கு ஆங்கிலமும் அவரை மிகவும் பிரபலமாகியது. அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் அவருக்கு ஏனோ அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
ஏழாவது மனிதன், பிக்பாக்கெட், அறுவடை நாள் உள்ளிட்ட ஒரு சில படங்களில் தலைகாட்டினார் சத்யஜித். தமிழில் குறைந்த அளவிலான அப்படங்களில் தான் வாய்ப்புகள் கிடைத்தாலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதற்கு பிறகு பெரியளவில் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார்.
கண்ணாடி, கோட் சூட் என இன்று வரை ஞாபகத்தில் இருந்து வருகிறார் சத்யஜித். அந்த படத்தில் பணிபுரிந்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர் என அனைவரும் நல்ல நிலையை அடைந்த நிலையில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சத்யஜித்திற்கு மட்டும் சரியான வாய்ப்புகளும் அங்கீகாரமும் அமையாதது பெரும் வருத்தம் தான். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு.