சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை லிலி கிளாட்ஸ்டோன் வென்றுள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் விருதை இவ்விருதினை வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை.


கோல்டன் குளோப் விருதுகள் 2024


சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் கோல்டன் குளோப் (Golden Globe Awards 2024). ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு நிகரான ஒரு மதிப்பு இந்த விருதுக்கும் இருக்கிறது.  இந்நிலையில் 81ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  


இதில் பெரும்பாலான பிரிவுகளின் கீழ் தேவாகியிருந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியிலும் நடந்த மிக முக்கியமான ஒரு தருணம் என்றால் நடிகை லிலி கிளாட்ஸ்டோன் விருது வென்றது தான்!


கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்


மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ (Killers of the flower moon) . லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன் மற்றும் ராபர் டி நிரோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். செவ்விந்தியர்கள் என்று அமெரிக்கர்களால் பொதுப்படையாக அழைக்கப்பட்ட இனத்தினர் ஒசேஜ் மக்கள்.


ஒசேஜ் மக்கள் வசித்து வந்த இடத்தில் கருப்பு தங்கம் என்று சொல்லப்படும் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தங்களது நிலத்தில் இருக்கும் வளங்களுக்காக முழு கட்டுப்பாடுகளையும் தங்கள் கையில் வைத்திருந்தார்கள் ஓசேஜ் மக்கள். இதனால் அமெரிக்கர்கள் ஓசேஜ் மக்களின் தயவை எதிர்பார்த்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒசேஜ் இனத்தின் பெண்களை கவர்ந்து அவர்களை திருமணம் செய்து அவர்களின் சொத்துக்களை கைவசப்படுத்து இரண்டு நபர்களின் கதை தான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’.


இந்தப் படத்தில்  நடித்திருந்த லிலி கிளாட்ஸ்டோன் (Lily Gladstone) உண்மையாகவே ஓசேஜ் இனத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் தனக்கு விஷம் ஊட்டுவது தெரியாமல் தனது உயிரை கையில் பிடித்துக் கொண்டு லிலி கிளாட்ஸ்டோன் போராடும் காட்சிகள் ரசிகர்களின் மனதை உலுக்கின. தற்போது இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் லிலி கிளாட்ஸ்டோன். ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் இந்த விருதை பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விருதை பெற்றுக் கொண்ட அவர் “ இது ஒரு வரலாற்று வெற்றி, எங்களுடைய கதைகளை எங்கள் வார்த்தைகளில் சொல்வதை பார்த்துக் கொண்டிருக்கும் என் இன மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்”  என்று அவர் கூறியுள்ளார்.