இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ஹூமா குரேஷி. இவர் 2018ம் ஆண்டு ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மும்பையின் தாராவியில் வசிக்கும் மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட காலாவில் ரஜினியின் முன்னாள் காதலியாக ஹூமா குரேஷி நடித்து இருந்தார்.


ஜெரீனாவாக இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி நடிப்பில் கெத்து காட்டி இருப்பார். ஜெரீனா மற்றும் கரிகாலனாக இருக்கும் ரஜினியின் காதல் நினைவுகள் ரசிகர்களை கொண்டாட வைத்தது.


காலாவின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் ஹூமா குரேஷி நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு கேங்ஸ் ஆஃப் வசேபூர் படத்தில் அறிமுகமான ஹூமா குரேஷி தொடர்ந்து இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். தொடந்து இந்தி திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வரும் ஹூமா குரேஷி, உடல் எடை காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். 


இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹூமா குரேஷி, திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் நடிகர்களை அவதூறாக பேசுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். “திரைப்படங்களை விமர்சனம் செய்வதை விட சிலர் விமர்சனம் என்ற பெயரில் நடிகர்களை அவதூறாகப் பேசுகின்றனர்.


படம் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம். படம் பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம். படம் பிடிக்கவில்லை என்பதற்காக ஏன் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டும்? தனி நபரை உருவக்கேலி செய்வதால் என்ன கிடைக்க போகிறது? தனிநபரை அவதூறாக பேச வேண்டாம். ஏனெனில் எதிர்மறையான கருத்துகள் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.


மேலும் தன்னை பற்றியும், தான் நடித்த படம் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்களை பார்த்து தெரிந்து கொள்வதாகவும் ஹூமா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.