பாலிவுட் பிரபலம் நமக்கெல்லாம் தங்கத் தாமரை மகளான கஜோல் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கஜோல்.. ஏதோ நடக்கிறது.. உங்களுக்குப் புரிகிறதா? என்று சூசகமாக பதிவிட்டு ரசிகர்களிடம் கேள்வியை முன்வைத்துள்ளார்.
இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகை கஜோல் பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் மிகவும் பிரபல தம்பதிகளான இவர்கள் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நைசா தேவ்கன், யுக் தேவ்கன் என்ற மகளும், மகனும் உள்ளனர். 1992ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான கஜோல் ஷாரூக்கான், சல்மான் கான் என்று இந்தி திரையுலகின் வெற்றிநாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.
தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் இவர் இணைந்து நடித்த மின்சார கனவே என்ற படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவாகினர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். கடைசியாக கஜோல் நடிப்பில் திரிபங்ரா என்ற படம் வெளியானது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்ட கஜோல்.. ஏதோ நடக்கிறது.. உங்களுக்குப் புரிகிறதா? என்று சூசகமாக பதிவிட்டு ரசிகர்களிடம் கேள்வியை முன்வைத்துள்ளார்.
அந்த வீடியோவில், சிவப்பு நிற பேன்ட்சூட்டில் இருக்கிறார். சூட்டிங் தளத்தில் வெளிச்ச வெள்ளத்தில் நிற்கும் அவரை ஒரு வாய்ஸ் ஓவர் தொடர்கிறது. அது திரும்பு, திரும்பு என்று கூறுகிறது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே என்ற படத்தில் நடிகை கஜோல் ரயிலில் ஏறும்போது ஷாருக்கான் திரும்பு திரும்பு என்பார். அதை நினைவுகூரும் வகையில் இந்த வீடியோவிலும் ஒரு குரல் திரும்பு.. திரும்பு என்று கெஞ்சுகிறது. அப்படியே திரும்பும் கஜோல் புன்னகைக்கிறார் ஒரு பூவைப் போல். ஆம் நான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் புத்தம் புதிய ஷோவில் வரவிருக்கிறேன் என்று மட்டும் சொல்கிறார்.
அந்த ஷோவின் பெயர் என்ன? அது என்ன மாதிரியான ஷோ என எந்த விவரமும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த வீடியோ கஜோல் ரசிககர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.