இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கிறார் நடிகை காஜல் அகர்வால். பிரசவத்திற்காக ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்ட காஜல் அகர்வால் தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 


 



வயதான தோற்றத்தில் காஜல் :


காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள ஸ்வாரஸ்யமான புகைப்படத்தில் தனது முகத்தை மறைந்து வெளியிட்டுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார் என்றும் அதற்காக அவர் ப்ரோஸ்த்தெடிக் மேக்கப் போட்டுள்ளார் என்றும் அதனால் தான் அவர் முகத்தை மறைந்தவாறு வெளியிட்டுள்ளார் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


குதிரை சவாரி செய்யும் காஜல் :


நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிட்ச்லு தம்பதியினருக்கு கடந்த ஆண்டு மே மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தனது மகன் நீல் கிட்ச்லு பிறந்த பிறகு ஒரு நீண்ட பிரேக் எடுத்து கொண்டு ஒரு குடும்ப தலைவியாக தனது குடும்பத்தை கவனித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார். இந்தியன் 2 படத்திற்காக குதிரை சவாரி செய்யும் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது மிகவும் ஆர்வமாக இருந்தது. எதிர்காலத்திலும் இது போன்ற விஷயங்களை பொழுதுபோக்காக செய்ய விரும்புகிறேன் என பதிவிட்டு இருந்தார். 


சென்னையில் நீண்ட ஷெட்யூல் :
 
கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் புதிய ஷெட்யூல் சென்னையில் தொடங்கியது. இது மேலும் ஒரு மாத காலத்திற்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தான் இப்படக்குழு மேற்கொள்ள இருக்கும் மிக நீண்ட ஷெட்யூலாகும். சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற இப்படத்தின் ஷெட்யூல் நிறைவடைந்தது. 


பான் இந்திய படம் :
 
இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் சேனாதிபதியாக நடிக்கிறார். அவரின் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். பான் இந்தியன் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த  அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.