விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாநகரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும், கைதி தான் இவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அத்தகைய பெரும் வெற்றியை அந்த திரைப்படம் பதிவு செய்தது.


இந்தியில் கைதி


இந்நிலையில் தான், கைதி படத்தின் இந்தி ரீ-மேக்கிற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஜய் தேவ்கன் கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமின்றி படத்தை இயக்கி, தயாரித்தும் உள்ளார்.  இந்த திரைப்படத்தின் முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஒரிஜினல் கைதி திரைப்படத்தில் சில சம்பவங்கள் எதார்தத்தை மீறி இருந்தாலும், அதை நம்பும் விதமாக படமாக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அஜய் தேவ்கன் ரீமேக் இயக்கத்தில் உருவாகியுள்ள, போலா திரைப்படமோ இந்தி திரைப்படத்திற்கே உரிய மசலா படமாக உருவாகியுள்ளது.



இரண்டாவது டீசரில் இருப்பது என்ன?


தமிழில் நரேன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார். டீசர் முழுவதும் ரத்த தெறிக்க, ஹீரோ அடித்து எலும்புகள் நொறுங்க,  இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் காற்றில் பறக்க என முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. லாரியில் இருந்து பறந்து வந்து பைக்கை கேட்ச் செய்து ஓட்டுவது போன்ற காட்சிகள் வலிமை படத்தை கண் முன் காட்டுகின்றன. திரிசூலத்தை கொண்டு ஒரு கூட்டத்தையே கொன்று குவிப்பது எல்லாம், தெலுங்கு திரைப்படத்தின் சாயலை நினைவூட்ட்கின்றன.


நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் டீசர்


போலா படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்னர் காஞ்சனா, ராட்சசன் ஆகிய படங்களை ரீ-மேக் என்ற பெயரில் பாலிவுட் உலகம் கொடுமை படுத்தியுள்ளதாக பரவலாக கருத்துகள் கூறப்பட்டது. இதனிடையே, தற்போது போலா படத்தின் டீசரையும் “ஏன்டா இப்படி பன்றீங்க..” எனக்கூறி மீம்ஸ் போட்டு தள்ளி வருகின்றனர், நம்ம ஊர் நெட்டிசன்கள்.  ”கைதி படத்தையே காணோமே” எனவும் சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.


 


மாஸ் காட்டிய கைதி


 கார்த்தியின் நடிப்பில், 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கைதி. படத்தில், நாயகி, பாடல்கள் என எதுவும் இல்லை.  கார்த்தி-நரேனைத் தவிர பெரிய திரை நட்சத்திரங்களும் இல்லை. இப்படி, வழக்கமாக சினிமா பாணியிலிருந்து மாறுபட்டு வெளியான கைதி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதற்கான காரணம், படத்தின் கதைக்களமும் லோகேஷ் கனகராஜ் கதையை சொல்லிய விதமும்தான். ஓடும் லாரியில் சண்டை காட்சியை வைப்பது, வயதான காவல் அதிகாரியைக் கொண்டு ஒட்டு மொத்த கேங்க்ஸ்டர் கூட்டத்தையே அழிப்பது என பல சர்ப்ரைஸ் எலிமென்டை படத்தில் வைத்திருந்தார் லோகேஷ். அந்த டச் இந்தி ரீமேக்கில் மிஸ் ஆவதாக, ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.