கைதி 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.   


விருமன் படத்தின் பிரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் நடிகர் வெவ்வேறு இடங்களுக்கு சென்று படத்தை பற்றி பேசி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று கேரளாவிற்கு சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, “ அடுத்த வருடம் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகர் விஜயின் தளபதி 67 படத்தை முடித்தவுடன் அந்தப்படத்தின் வேலைகளை தொடங்க இருக்கிறோம்” என்று பேசினார். 


 






முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப்படத்தின் 2 பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லோகேஷ் விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதில் விக்ரம் படத்தில் கைதி 2 படத்திற்கான சில லீட் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில்தான் கார்த்தி கைதி 2 படத்திற்கான அப்டேட்டை தற்போது கொடுத்திருக்கிறார். 


 






முன்னதாக,தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்.


இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின்  இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார். 


 






முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.