5  துப்பாக்கி ஏந்திய காவலர்களால் சூர்யாவை காப்பாற்ற முடியாது என காடு வெட்டி குருவின் மகன் கனல் அரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து தனியார் ஊடத்திற்கு பேசியுள்ள அவர், “ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக, அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு 10 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு சூர்யாவின் வீட்டின் முன்பு நின்றால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய காவலர்களால் சூர்யாவையோ, இயக்குநர் ஞானவேலையோ  காப்பாற்றி விட முடியாது.


ஜெய்பீம் படத்தில், அந்த காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை. வன்னிய சமூக மக்களை புண்படுத்திய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்தப் படத்திலும் நடிக்கவும்  முடியாது தயாரிக்கவும் முடியாது. இயக்குனர் ஞானவேல் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது” என்று கனல் அரசன் கூறியுள்ளார். இவரது இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 




முன்னதாக, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன.




இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே காடு வெட்டி குருவின் மருமகன் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் படங்களை வெளியிடும் திரையரங்கை கொளுத்துவோம் என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கருணாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கனல் அரசன் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க..