வங்கக்கடலில் நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்துள்ளது. மேலும், விழுப்புரம், வேலூர், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் பாலாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், மழை அபாயம் காரணமாக காஞ்சிபுரம்,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதிதான் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் என்று நடைபெறும் சூழலில், தற்போது தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருவதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்