நடனப்புயல், தென்னகத்தின் மைக்கேல் ஜாக்சன் என பல அடைமொழியோடு அழைக்கப்பட்ட பிரபுதேவா, முதன் முதலில் முழுநீள ஹீரோவாக நடித்த முதல் படம் காதலன். ஜென்டில்மேன் முடித்த கையோடு, ஷங்கர் அடுத்து என்ன படத்தை எடுக்கப் போகிறார் என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்க, முழு நீள காதல் கதையோடு காதலன் என்கிற படத்தை களமிறக்கினார் ஷங்கர்.


பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பி., வடிவேலு , மனோரமா என முகம் தெரிந்த நடிகர்கள் பலர் படத்தில் உண்டு. நக்மா முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகம் ஆன திரைப்படமும் காதலன் தான். கல்லூரி மாணவன் ஒருவன், அதிகார மையத்தில் இருக்கும் ஒருவரின் மகளை காதலிக்கிறான். அவனை முதலில் வெறுக்கும் அந்த பெண், பின்னர் அவனின் காதலை புரிந்து கொண்டு, அவளும் காதலிக்கிறார். 






மிடில் கிளாஸ் டிரைவரின் மகனான பிரபுதேவாவின் காதலை, நக்மாவின் தந்தை எதிர்கிறார். எதிர்த்ததோடு நிற்காமல், பிரபு தேவாவிற்கு பல டர்ச்சர்களை கொடுக்கிறார். அந்த டர்ச்சர்களால், நக்மா மீது இன்னும் காதல் அதிகமாகிறது. வீட்டு தேவதையாக தந்தை கட்டுப்பாட்டில் இருக்கம் நக்மாவை , தன் வீட்டு மருமகளாக்க பிரபுதேவா எடுக்கும் முயற்சிகளும், அதற்கு நக்மாவின் தந்தை காட்டும் ரியாக்ஷனும் தான் கதை.


ஜென்டில்மேன் மாதிரி ஒரு த்ரில்லிங் ஆக்ஷன் படத்தை கொடுத்துவிட்டு, அடுத்த படத்தில் அப்படியே உல்டாவாக காதல் கதையை நம்பி களமிறங்கினாலும், அதிலிலும் தனக்கான பிரம்மாண்டங்களை வைத்து ஷங்கர், அப்லாஷ்களை அள்ளினார். போதாக்குறைக்கு வடிவேலு-பிரபுதேவா காமினேஷன் பெரிய அளவில் வேலை செய்தது. 


இதையெல்லாம் விட, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், பின்னணியும் படத்தை பட்டாசு வெடிக்கும் ஹிட் ஆக்கியது. காதலன் படத்தின் அனைத்து பாடல்களும் இன்றும் ஹிட் லிஸ்டில் தொடர்கிறது. ஒரு படத்திற்கு எதுவெல்லாம் சேர்ந்தால் வெற்றி கிடைக்குமோ, அதுவெல்லாம் காதலன் படத்திற்கு சேர்ந்தது தான் அந்த படத்தின் பலம். 






மிடில் கிளாஸ் தந்தையாக எஸ்.பி.பி.,யின் நடிப்பு, இந்த படத்தில் குறிப்பிடத்தக்கது. அதே போல், ஆந்திரபகுதியில் வரும் நக்மாவின் பாட்டியாக மனோரமாவின் நடிப்பும் சிறப்பு. அறிமுகம் என்கிற பயமே இல்லாமல் அலாதியாக நடித்திருந்த நக்மாவின் காதலும், முதல் ஹீரோ ரோலில் பிரபுதேவாவின் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே 90களில் காதலர்களை கலங்க வைத்திருக்கும். 


ஒவ்வொரு இயக்குனருக்கும் முதற்படியை விட இரண்டாவது படி தான் மிக முக்கியம் என்பார்கள். அந்த வகையில், இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது படியான காதலன், அவருடைய அடுத்தடுத்த கெரியருக்கு பெரிய அளவில் பலம் சேர்த்தது. 1994 செப்டம்பர் 17 ம் தேதி வெளியான காதலன், இன்றோடு 28 ஆண்டுகளை கடக்கிறது.