சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் நேற்று காலை போக்குவரத்து காவலர் பாண்டியன் (42) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவரது தம்பி மகன் கோகுல் ராஜ் (23) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் செல்போன் பார்த்தவாறு இயக்கிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் ஆட்டோ ஓட்டுனருக்கும், வாலிபர் கோகுலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த காவலர் பாண்டியன் வாகனத்தை எடுக்குமாறு கூறி வாலிபர் கோகுலிடம் கூறிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வாலிபர் கோகுல் ராஜ் போக்குவரத்து காவலர் பாண்டியனை மூக்கின் மீது குத்தியுள்ளார். இதில் காயம் ஏற்பட்ட ரத்தம் சொட்டசொட்ட போக்குவரத்து காவலர் பாண்டியனை சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய வாலிபரை சேலம் டவுன் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். போக்குவரத்து காவலரை தாக்கிய கோகுல் ராஜ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது இடத்திற்கு பங்கம் விளைவித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் டவுன் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹாேதா, மாநகர துணை ஆணையாளர் லாவண்யா உள்ளிட்ட காவல்துறையினர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போக்குவரத்து காவலரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலரை இளைஞர் தாக்கிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.