தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகரான கார்த்தி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்; அந்த வகையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து அவரின் ரசிகர்களை திணறடித்தார்.
நடிகர் கார்த்தி நடிகராக அறிமுகமாவதற்கு முன்னரே உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சினிமா குறித்த அவரின் பார்வையே வேறு என்பதை சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மெகா ரவுண்டு டேபிள் சந்திப்பின் மூலம் நிரூபித்துள்ளார் நடிகர் கார்த்தி. துல்கர் சல்மான், கரண் ஜோகர், வருண் தவான், அனுராக் காஷ்யப், ஸ்ரீநிதி ஷெட்டி, பூஜா ஹெக்டே மற்றும் பலரும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கார்த்தி பேசிய சில விஷயங்களை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
"ஒரு நல்ல படம் என நீங்கள் அதை அணுகும் போது சரியான முறையில் வழங்க நினைத்தால் படம் தொடங்கிய நாள் முதல் அது தியேட்டருக்கு சென்றடையும் வரை ஏராளமான செயல்முறைகள் அதற்குள் அடங்கும். சத்யராஜின் கூற்று படி ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒருவர் மூலம் அந்த ஒட்டுமொத்த படத்தின் விஷனையும் கெடுக்க வாய்ப்பு உள்ளது. ஒரு புதுமுகத்தின் அறிமுகம், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், கேமராமேன் என யாரால் வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தின் கதையின் அம்சமும் முற்றிலுமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே நீங்கள் என்ன விஷனில் அந்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தீர்களா அதில் இருந்து விலகி போக வாய்ப்புகள் உள்ளன. அதனால் படத்தின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் படத்தின் தரத்திலும் அது உங்களுக்கு திருப்தியை தருகிறதா என்பதிலும் ஃபோகஸ் செய்ய வேண்டும்.
உங்களின் கதையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அது உங்களுக்கு எந்த அளவிற்கு உத்வேகத்தை கொடுக்கிறது என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதனால் தான் கே.ஜி எஃப் போன்ற ஒரு படத்தை எடுத்து அதை இந்த அளவிற்கு ஒரு வெற்றி படமாக மாற்ற முடிந்தது. யாஷ் அது நிச்சயம் மக்கள் மத்தியில் ரீச்சாகும் என முழுமனதாக நம்பினார். எனவே படத்தின் ஒரு அங்கமாக நீங்கள் இருக்கும் போது எந்த இடத்தில் ரசிகர்கள் உங்களை விரும்புவார்கள் உற்சாகப்படுத்துவார்கள் என்பதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்" என கூறியிருந்தார் கார்த்தி.
கார்த்தி சினிமா குறித்த நுண்ணறிவை அங்கு இருந்த மற்ற பிரபலங்களும் தலையை அசைத்து ஒத்துக்கொண்டனர். அது தான் சக்சஸின் கி பாயிண்ட் என்பதை மிகவும் அருமையாக உணர்த்தினார் நடிகர் கார்த்தி.