தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை. வயது 53, இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுடலை மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது  நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


சுமார் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சுடலைக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்பதை அறிந்த சுடலை நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. தொடர்ந்து அவருக்கு சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி உத்தரவிட்டார்..ஏற்கனவே விஷம் அருந்திய சுடலை நீதிமன்ற வளாகத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் விஷம் குடித்ததை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுடலை உயிரிழந்தார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தண்டனை அறிந்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..








 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண