முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலைப் பிரகடனத்தை அமல்படுத்தியதை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ’எமெர்ஜென்சி’.
இப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்து அத்துடன் படத்தை இயக்கியும் வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். ரித்தேஷ் ஷா இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
1971ஆம் ஆண்டு இந்திரா காந்தியாக இந்த வீடியோவில் கங்கனா தோன்றியுள்ள நிலையில், இந்திரா காந்தியின் உடல் மொழி, கெட் அப், ஆடை என அனைத்திலும் பக்காவாகப் பொருந்தி தனது ரசிகர்கள் அல்லாதோரின் பாராட்டுக்களையும் கங்கனா பெற்றுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ படத்தில் கங்கனா நடித்திருந்தார். இந்நிலையில், இப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல என முன்னதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கங்கனா தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் எதிர்மறை விமர்சனங்களை பெருவாரியாகப் பெற்று வரும் நிலையில், இந்த ட்ரெய்லரில் அவர் ஒரு நடிகையாக இந்திரா காந்தியை பிரதிபலித்துள்ள விதம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்