திருவண்ணாமலை போளூர் சாலை கிரிவலப்பாதையின் சந்திப்பில் தனியாருக்கு சொந்தமான இடத்தை அமைச்சர் எ.வ.வேலு விலைக்கு வாங்கி திமுக சார்பில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைத்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கார்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றம் சிலை வைக்க தடை விதித்தது. அதன் பிறகு வழக்கை கொடுத்த கார்த்தி வழக்கை மீண்டும் வாபஸ் பெற்றார். அதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டது. லட்ச கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் நிறுவப்பட்டுள்ள 9 அடி உயர கருணாநிதி சிலையை திருவண்ணாமலைக்கு வந்த பாஜக முன்னாள் தேசியத் தலைவர் எச்.ராஜா, கிரிவலப்பாதையில் இடையூறாக கருணாநிதி சிலை வைக்கபட்டுள்ளதா? என்பதை நேரில் பார்வையிட்டார். சிலை உள்ள இடத்திற்கு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு தான் 250 சதுர அடிக்கு பட்டா வழங்கப்பட்டது. 92 அடியாக மாறியது என்று அவர் கிரிவலம் வருபவர்களுக்கு கண் உறுத்துகிற மாதிரி நாத்திகர் சிலை இங்கே வைத்திருப்பது தவறு, இதை எதிர்த்து ஆன்மீக சக்திகளை இணைத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.


 




இந்நிலையில் கடந்த 8-ந் தேதி திருவண்ணாமலைக்கு வருகை பல்வேறு நல திட்டங்களை அளிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். கருணாநிதி சிலையை திறந்து வைத்து ஸ்டாலின் பேசுகையில், திருவண்ணாமலையும், தீபத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அதுபோல் திருவண்ணாமலையும், திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழ்மொழியை காக்கவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டிய திருவண்ணாமலையில் அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலை அமைத்திருப்பது பொருத்தமானது என்று பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றினார். இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருணாநிதி சிலை உள்ள இடத்திற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், மாநில மருத்துவ அணி துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமையில் வந்த திமுகவினர், கருணாநிதியின் சிலையின் பீடத்தில் பொரி கடலை, பழங்கள் வைத்து படையலிட்டனர்.


 




அதன் பின்னர் தேங்காய் உடைத்து கருணாநிதி சிலைக்கு தீபாராதனை காட்டி வணங்கினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புளி அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக பெரிய தெருவில் பழைய மாவட்ட திமுக அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில், கார்த்திகை தீபம், சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்குவார்கள். இப்போது முதன்முறையாக பௌர்ணமி நாளில் கருணாநிதி சிலை முன்பு அன்னதானம் வழங்குவதை தொடங்கியுள்ளனர். இதனிடையே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை அண்ணாமலையார் கோவிலிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கொரோனா தொற்றில் இருந்து தனது தந்தை பூரண குணமடைய வேண்டிக்கொண்டு அவர் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண