சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்,கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் சிந்து, சாய்னா, பிரணாய், அஷ்மிதா உள்ளிட்டோர் வெற்றி பெற்று இருந்தனர். 


இதனிடையேஇன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை சாய்னா நேவால் 21-19 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமை பிங் ஜியோ 21-11 என்ற கணக்கில் வென்றார். இதன்காரணமாக இரு வீராங்கனைகளும் தலா ஒரு கேமை வென்று இருந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. இந்த கேமில் சாய்னா நேவால் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அந்த கேமை சாய்னா நேவால் 21-17 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் போட்டியை 21-19,11-21,21-17 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் உலக தரவரிசையில் 9ஆம் இடத்திலுள்ள பிங் ஜியோவை சாய்னா நேவால் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல் இரண்டாவது சுற்றுப் போட்டியில்  பி.வி.சிந்து நுகின் துயுவை எதிர்த்து விளையாடினார்.  19-21,21-19,21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து நுகினை போராடி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.  ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரணாய் உலக தரவரிசையில் 4வது இடத்திலுள்ள தியன் சென்  எதிர்த்து விளையாடி 14-21,22-20,21-18 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 


இதன்மூலம் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் ஜப்பானின் கொடை நரோகாவை எதிர்கொள்கிறார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி.வி சிந்து சீனாவின் ஹான் யூவுடனும், சாய்னா நோவால் ஜப்பானின் அயா ஓஹோரியுடனும் மோதவுள்ளனர். அதேசமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜூன் ஜோடி இந்தோனேசிய பாட்மிண்டன் வீரர்களான முகமது அஹ்சன், ஹெந்திரா செட்டியவான் ஜோடியை எதிர்கொள்கின்றனர். 


முதல் 3 நாட்களுக்கான போட்டிகளும் எந்தவித விளையாட்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகவில்லை.மாறாக BWF ( Badminton World Federation) இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலான BWF டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளை முதல் Sports 18-1 என்ற சேனலில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலிறுதி போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும், அரையிறுதி போட்டிகள் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், இறுதிப் போட்டி மதியம் 1 மணி முதல் இரவு 7  மணி வரையும் நடைபெறுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண