கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படம் வெளியாகியிருந்தது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு எவ்வித எதிர்பார்ப்புமே இல்லாமல் வெளியான கேஜிஎஃப் தமிழில் சிறந்த டான் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வசூலிலும் சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு, கடைசியாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாகியது. 






கேஜிஎஃப் - 2க்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக அந்தப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. வசூலிலும் 1000 கோடியை கடந்த இப்படம் முடிவுக்கு வரும் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக 3ஆம் பாகம் வெளிவரும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பங்பேற்ற நடிகர் யஷ், தனது துறையில் உள்ள ஒவ்வொரு நடிகரும் இயக்குனரும் ஒரு பான் இந்திய நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதே போல் கர்நாடக மக்கள் வேறு எந்தத் துறையையும் இழிவுபடுத்துவதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில்,” கர்நாடக மக்கள் மற்ற மொழி திரைப்படங்களை  தாழ்த்தி நடத்துவதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் எங்களை எல்லோரும் அப்படி நடத்தும்போது நாங்கள் பல சிக்கலை எதிர்கொண்டோம். இந்த மரியாதையை பெற நாங்கள் கடுமையாக உழைத்தோம். அதனால் நாம் யாரையும் தாழ்த்தி நடத்தாமல், அனைவரையும் மதிக்க வேண்டும். இந்த வடக்கு, தெற்கு என்ற வேறுபாட்டை மறக்கவேண்டும். பாலிவுட்டை மதிக்க வேண்டும்.


ஒரு நாடாக, நாம் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.  உள்கட்டமைப்பை மேம்படுத்தி, திரையரங்குகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற பல வேலைகள் இருக்கிறது. இந்த தலைமுறையினர் நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், வெளியே சென்று, மற்ற உலக நாடுகளுடன் போட்டியிட வேணடும்.  ‘இந்தியா வந்துவிட்டது என்று சொல்ல வைக்க வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.






இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆருடனும் இணையவுள்ளார் என்பதால் 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு கேஜிஎஃப் 3 பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது.