80களில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தாலும், அந்த நேரத்திலும் ராமராஜன், டி.ராஜேந்திரன், மோகன், விஜயகாந்த், பாக்யராஜ் என, தனித்துவ நாயகர்கள், தொடர் ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில், பாக்யராஜ் இயக்கி, நடித்த மெகா ஹிட் திரைப்படம் முந்தானை முடிச்சு படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். படம் பழசு தான், ஆனால், இன்னும் அதை பார்க்காத எத்தனையோ 20K, 21K கிட்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பொருத்தவரை, இதெல்லாம் ஒரு படமா என்கிற எண்ணம். உண்மையில் , அதுவல்ல... சினிமாவை நெடுக அழைத்து வருவதில், 80களில் வெளியான படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
மனைவியை இழந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் கை குழந்தையுடன் கிராமம் ஒன்றுக்கு மாறுதல் ஆகி வருகிறார். அங்கு தங்கி பணியாற்றும் அவர், தனது வேலை மற்றும் குழந்தையை கவனிப்பதை அன்றாட நடவடிக்கையாக தொடர்கிறார். அதே கிராமத்தில் ஊர் தலைவரின் மகளாக வரும் இளம் பெண் ஒருவர், சிறுவர்கள் சிலரை வைத்துக் கொண்டு குறும்பு செய்பவராக இருக்கிறார். கைக்குழந்தையோடு வந்த ஆசிரியர் மீது, இளம் பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது.
மறுமணத்திற்கு விருப்பமில்லாத அந்த ஆசிரியர், இளம் பெண்ணின் எண்ணத்தை புரிந்து விலகிச் செல்கிறார். ஆனால், பல்வேறு நாடகங்களை நடத்தி, இறுதியில், ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுப்பி, அவரை மணக்கிறார் அந்த இளம் பெண். தன்னை ஏமாற்றி திருமணம் செய்த விரக்தியில், அந்த இளம் பெண்ணை வெறுக்கிறார் ஆசிரியர். பிரச்சனைகளை சரிசெய்து, ஆசிரியர் மனதை மாற்றுகிறாரா இளம் பெண்? இளம் பெண்ணின் பாசத்தை புரிந்து, இணைந்தாரா ஆசிரியர்? இது தான், முந்தானை முடிச்சு படத்தின் கதை.
ஒரு பள்ளிக்கூடம், ஒரு கிராமத்தை வைத்து ஒட்டு மொத்த படத்தையும் முடித்திருப்பார் இயக்குனர் பாக்யராஜ். படத்திற்கு ஆன செலவு, வெறும் 3 மில்லியன் தான். ஆனால், லாபம் 40 மில்லியன். ஏவிஎம் தயாரிப்பு வரலாற்றில், அதிக லாபம் ஈட்டித்தந்த படங்களில், முந்தானை முடிச்சு மிக முக்கியமான படம். ஆசிரியராக பாக்யராஜ், இளம் பெண்ணாக ஊர்வசி, இருவரின் கதாபாத்திரமும் படத்திற்கு பலமாய் போக, எஞ்சிய சிறு சிறு கதாபாத்திரங்களும் கை கொடுக்க, அனைவரின் முந்தானையில் முடியப்பட்டது, முந்தானை முடிச்சு.
1983 ஜூலை 22 ல் வெளியான அந்த திரைப்படத்திற்கு, அப்போதே ஒளிப்பதிவை செய்திருப்பார் அசோக் குமார். இன்று பார்த்தாலும், பளிச்சிடும் படியான லைட்டிங் இருக்கும். பாக்யராஜ் என்ன நினைத்தாரோ, அதை அப்படியே நறுக்கியிருப்பார், எடிட்டர் செல்வானந்தன். ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாத அளவிற்கு காட்சிகள் இருக்கும் . அது தான், படத்திற்கு பெரிய ப்ளஸ். இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர், டூப்பர் ஹிட்.
காமெடி, காதல் என்பதை கடந்து, மறுமணம், தாம்பத்யம், குடும்பக் கட்டுப்பாடு, மூட நம்பிக்கை உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஆங்காங்கே தூவியிருப்பார் பாக்யராஜ். அன்றைய காலகட்டத்தில் அதெல்லாம் தேவைப்பட்டது. அதற்கு முந்தானை முடிச்சு தூபம் போட்டது. மணிக்கணக்கில் வெப்சீரிஸ் பார்க்கும் நமக்கு, 150 நிமிடத்தில் ஒரு கலகலப்பான குடும்ப சித்திரத்தை பார்க்கும் எண்ணம் இருந்தால், அதற்கு முந்தானை முடிச்சு சரியான சாய்ஸ். இன்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும் முந்தானை முடிச்சை, யாரும் அவிழ்க்க முடியாது.