மாலிவுட் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான "ரோர்ஷாச்" திரைப்படம் அபாரமான வெற்றியை பெற்றுள்ளது. ஆரவாரத்தில் இருக்கும் அவரின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் மம்மூட்டி. தனது அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார் மம்மூட்டி. ஜியோ பேபி இயக்கத்தில் "காதல்-தி கோர்" திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பேரழகி ஜோதிகா உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் மெகா ஸ்டார். மேலும் நடிகை ஜோதிகாவின் கணவர் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான சூர்யாவும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜோதிகாவின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தயாரிப்பு :
நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பில் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாக உள்ளது"காதல்" திரைப்படம். "ரோர்சாச்" மற்றும் "நண்பர்கள் நேரத்து மயக்கம்" திரைப்படங்களை தொடர்ந்து மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகவும்.
மாலிவூட்டின் மிகவும் பிரபலமான இயக்குனரான ஜோ பேபியுடன் முதன் முறையாக மம்மூட்டி இப்படம் மூலம் இணைகிறார். 'தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘2 பெண்குட்டிகள்’ மற்றும் ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஜோ பேபி.
ஜோதிகா மீண்டும் என்ட்ரி :
தென்னிந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகை ஜோதிகா இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு ஈரா சரவணன் இயக்கத்தில் வெளியான "உடன்பிறப்பே" திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகை ஜோதிகா.
லைன் கட்டும் படங்களின் பட்டியல் :
71 வயதான மெகா ஸ்டார் நடிப்பில் 2022 ஆண்டில் மட்டுமே ‘புழு’, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘ரோர்ஷாச்’ உள்ளிட்ட படங்கள் இதுவரையில் வெளியாகியுள்ளன. மேலும் 2023ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களான ‘கிறிஸ்டோபர்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘கடுகண்ணாவ ஒரு யாத்ரா’, ‘பிலால்’, மற்றும் ‘காதல்’ என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டும் அவருக்கு ஒரு சிறப்பான ஒரு ஆண்டாக இருக்கும்.