தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. எக்ஸ்பிரஷன் குயின் என ரசிகர்கள் இவரை கொண்டாடினார். நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோ 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக ஓ.டி.டியில் வெளியான திரைப்படம் 'உடன்பிறப்பே'. தற்போது மம்மூட்டி ஜோடியாக 'காதல் : தி கோர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



ஜோவின் ஃபிட்னஸ் ஆர்வம் :


தற்போது ஒர்க்அவுட், ஃபிட்னஸ் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து வருகிறார். அந்த வகையில் தலைகீழாக அவர் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்தது. 


பாலிவுட்டில் ரீ என்ட்ரி :


நடிப்பு மற்றும் தயாரிப்பு என பல வகையில் பிஸியாக இருந்து வரும் ஜோதிகா குறித்து மகிழ்ச்சியான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் ஜோதிகா என்ற தகவல் வெளியாகி அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. 1998ம் ஆண்டு 'டோலி சாஜா கே ரக்னா' என்ற படத்தில் நடிகர் அக்‌ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு பிறகு தென்னிந்திய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா தற்போது இயக்குனர் விகாஸ் பால் இயக்கும் புதிய படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 


விரைவில் துவங்கும் படப்பிடிப்பு :


குயின், குட் பை, சூப்பர் 30 உள்ளிட்ட படங்களை இயக்கிய விகாஸ் பால்  சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளார். அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். ஜூன் மாதம் லண்டன், மும்பை, முசோரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். 


கைதியின் ஹிந்தி ரீ மேக் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக் படமான 'போலா' படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஈட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.