தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படம் ஜூனியர் என்.டி.ஆர் புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. அப்படத்தைத் தொடர்ந்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த தகவல் ஒன்று தற்போது டோலிவுட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 



ஜான்வி கபூர் அறிமுகம் :


மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை ஜான்வி கபூர் இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒத்திவைக்கப்பட்ட ரிலீஸ் தேதி :


யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்து இருந்தனர். இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட காலதாமதத்தால் இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று ஒத்திவைக்கப்பட்டு வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்னர் போஸ்டர் மூலம் அறிவித்து இருந்தனர்.



ரூ.400 கோடி விற்பனை ஒப்பந்தம்:


தற்போது இப்படம் பற்றிய தகவல் ஒன்று திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஜூனியர் என்.டி.ஆர் - ஜான்வி கபூர் நடித்துள்ள 'தேவாரா' பார்ட் 1 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி ரூபாய்க்கு முந்தைய விற்பனை ஒப்பந்தத்தை முடித்துவிட்டதாக தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. செயற்கைக்கோள், டிஜிட்டல், இசை மற்றும் படத்தின் டப்பிங் உள்ளிட்டவைக்கு பெற வேண்டிய உரிமைகளும் இதில் அடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் இப்படம் ப்ரீ பிஸ்னஸ் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மோகன்லாலுடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'ஜனதா கேரேஜ்' படத்தை இயக்கிய கொரட்டாலா சிவா, இரண்டாவது முறையாக 'தேவாரா' படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நடிகை ஜான்வி கபூர், தேவாரா படத்தை தொடர்ந்து மற்றொரு ஆர்.ஆர்.ஆர் பட நடிகரான ராம் சரண் ஜோடியாக ஆர்.சி.16 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது. டோலிவுட் சினிமாவைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவிலும் ஜான்வி கபூர் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.