Dubai flood: செவ்வாயன்று பெய்த கனமழையால் துபாயின் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.


கொட்டி தீர்த்த பேய்மழை:


ஐக்கிய எமிரேட்ஸ் அரசாங்கம் வெளியிட்டு இருந்த முன்னெச்சரிக்கையில், “அதிகனமழைக்கு வாய்ப்பு ருப்பதால் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், தவிர்க்க முடியாத மிகமுக்கிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள்” என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதனைதொடர்ந்து, திங்கட்கிழமை பிற்பகலில் துபாயில் மழை பொழிய தொடங்கியது. இதனால் துபாயின் வறண்ட பாலைவன மணல் மற்றும் சாலைகள் சுமார் 20 மில்லிமீட்டர் மழையி நனைந்தன. ஆனால், செவ்வாய்கிழமை மழை மேலும் தீவிரமடைந்தது. அந்த நாளின் முடிவில்  142 மில்லிமீட்டர் மழை துபாயில் பதிவானது. அதாவது துபாயில் ஒன்றரை வருடத்தில் பெய்ய வேண்டிய மழையாந்து, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்தது.


முடங்கிய துபாய்:


வரலாறு காணாத கனமழையால் துபாய் நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. விமான நிலையத்தில் விமான சேவைகள் 25 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பல வாகனங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்படது. குடியிருப்புகள் மழை நீரால் சூழ்ந்தது. ஆனாலும், வலுவான உட்கட்டமைப்பு காரணமாக வெகு விரைவிலேயே துபாய் இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்படுகிறது.


கனமழைக்கான காரணம் என்ன?


சிஎன்என் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, துபாயை வெள்ளத்தில் தத்தளிக்க செய்த மழை, அரேபிய தீபகற்பத்தை கடந்து ஓமன் வளைகுடா முழுவதும் நகரும் ஒரு பெரிய புயலுடன் தொடர்புடையது. இதே புயல் வழக்கத்திற்கு மாறாக ஈரமான வானிலையை, அருகிலுள்ள ஓமன் மற்றும் தென்கிழக்கு ஈரானுக்கும் கொண்டு வருகிறது. ஓமன் நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் .


காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல்:


துபாயில் கொட்டி தீர்த்த கனமழைக்கு காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றத்தின் பங்கை ஆராயும் ஃபிரைடெரிக் ஓட்டோ, அசாதாரண மழையின் பின்னணியில் புவி வெப்பமடைதலும் பங்களிப்பதாக சுட்டிக்காட்டினார். அதன்படி,  "ஓமன் மற்றும் துபாயில் உள்ள கொடிய மற்றும் அழிவுகரமான மழை மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்துள்ளதாக" தெரிவித்துள்ளார்.


கிளவுட் சீடிங்கால் கனமழை:


கிளவுட் சீடிங்கு கனமழைக்கு பகுதியளவு காரணமாக உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வானியல் ஆய்வாளர் அஹ்மத் ஹபீப், கடந்த இரண்டு நாட்களில் கிளவுட் சீடிங் விமானங்கள் ஏழு பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான்பரப்பில் பொருந்தக்கூடிய எந்தவொரு மேகத்திலும் கிளவுட் சீடிங் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது" என்று கூறினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2002ம் ஆண்டு தண்ணீர் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்க கிளவுட் சீடிங் நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த செயற்கை மழைய உருவாக்கும் முயற்சியில் ரசாயனங்கள் மற்றும் சிறிய துகள்கள் - பெரும்பாலும் பொட்டாசியம் குளோரைடு போன்ற இயற்கை உப்புகள் வளிமண்டலத்தில் தூவப்படுகிறது.