யூ ட்யூப் வலைத்தளத்தில் ஆபாசமாக பேசும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி , தூத்துக்குடியை சேர்ந்த தேவி என்பவர் கொடுத்த புகாரில் , புகாரின் மீது  விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் பரிந்துரை செய்துள்ளார்.




சமீபமாக யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் டிக்டாக் பிரபலம் என்கிற பெயரில், சிலர் போடும் பதிவுகள் நாராசமாக உள்ளது. அது தொடர்பான புகார்களும் தற்போது தலைதூக்கத்துவங்கியுள்ளது. இந்நிலையில் டிக்டாக் பிரபலம் என்கிற பெயரில் ரவுடி பேபி சூர்யா செய்யும் இம்சைகள், அருவெறுப்பாக இருப்பதாக பரவலாக பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர், ரவுடி பேபி சூர்யா மீது புகார்  ஒன்று அளித்தார். அதில், ‛ தான் யூடியூப் பயன்படுத்துவதாகவும் , தன்னுடைய மகன் மற்றும் மகள்கள் தன்னுடைய செல்போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்தும் போது,  ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா இருவரும் அவர்களின்  யூ ட்யூப் சேனலில் பொதுத்தளத்தில் ஆபாசமாக பேசுவதும் , அரைகுறை ஆடையுடன் தோன்றுவதும்  போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்ய பொதுமக்களிடம் பணம் வசூலிலும் ஈடுபடுகின்றனர். மேலும் மதுவை வாங்கி குடிப்பது மற்றும் விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தனது மொபைல் போனில் வருவதாகவும், இதனால் தங்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் அவர்களின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும்,’ என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரினை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருந்தார். அதற்கான நகலை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கும் அனுப்பினார். இந்த நிலையில் இந்த புகார் மனு குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் ஒரு பரிந்துரையை செய்துள்ளார். அந்த பரிந்துரை கடிதத்தில் ,  ‛இந்த புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு,’ திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.



நீதிபதி நேரடியாக பரிந்துரை செய்துள்ளதால், கட்டாயம் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே ரவுடி பேபி சூர்யா, அவரின் மனம் கவர்ந்த சிக்கா, ஜி.பி.முத்து உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது முதல்வரின் தனிப்பிரிவிற்கும், நீதிபதிக்கும் சென்ற மனு, பூதாகரமாக கிளம்பியிருப்பதால், ரவுடி பேபி சூர்யா மீது வழக்கு பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி அவர் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.