தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக சினிமாவை தியேட்டருக்குச் சென்று பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம். அதேநேரத்தில் இயக்குநருக்காக தியேட்டருக்கு வரும் ரசிகர்களும் கணிசமான அளவில் உள்ளனர். இப்படியான ரசிகர்களை தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் இயக்குநர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இவரது இயக்கத்தில் உருவாகி பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் உள்ள திரைப்படம் என்றால் அது, துருவ நட்சத்திரம். இப்படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இவரது இயக்கத்தில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் ஜோஸ்வா இமைபோல் காக்க. இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வருண் நடித்துள்ளார். இவரது நடிப்பை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பாராட்டியுள்ளார்.
“எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்ஷன் படங்களை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இருப்பினும், வருணுடன் பணியாற்றுவது என்பது மிகவும் இனிமையான அனுபவம். வருண் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்ததோடு, கதாபாத்திரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் முக்கிய பங்கு வகிக்கும், அதே வேளையில், கதையோட்டத்தில் எமோஷன் மற்றும் காதலும் பின்னிப்பிணைந்துள்ளது.
வருண் கதையில் வரும் அனைத்து ஸ்டண்ட்களையும் பாடி டபுள் இல்லாமல் செய்தார். (பாடி டபுள் என்பது நடிகருக்கு பதிலாக அவரைப் போன்ற உருவ அமைப்பு கொண்டவர் நடிப்பது.) அருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக இருந்தது. வருண் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்க, ராஹேவின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கும். எப்படி மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பாரோ அதே பாணியை வருண் கையாண்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதேசமயம் கிருஷ்ணா வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று தொடக்கத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், கிருஷ்ணா ஒப்புக்கொண்டதோடு மட்டும் இல்லாமல் தான் ஏற்றுக் கொண்ட கதாப்பாத்திரத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். செட்டில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஸ்டண்ட் டீம் சிறப்பானப் பணியைச் செய்துள்ளார்கள். திரையரங்குகளில் அனைத்து ரசிகர்களுக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்” என பேசியுள்ளார்.
'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார். இப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.