சர்வதேச மாத இதழான ரோலிங் ஸ்டோன் பாடகி ஜோனிடா காந்தியின் புகைப்படத்தை செப்டம்பர் மாத இதழில் வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளது. 


உலகமெங்கும் பிரபலமான  ‘ரோலிங் ஸ்டோன்’ இதழ் அமெரிக்க மாத இதழ்களில் ஒன்று. அரசியல், இசை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அலசும் இந்த இதழின் அட்டைப்படமானது ஒவ்வொரு முறையும் உலகமெங்கும் அதிக கவனம் பெறும். அதனால் தங்களது புகைப்படமும் இந்த இதழின் அட்டைப்படத்தில் வரவேண்டும் என்பது கலைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாத இதழில் பாடகி ஜோனிடா காந்தியை கவர் ஸ்டாராக கெளரவப்படுத்தி அவரின் புகைப்படத்தை இதழில் அச்சடித்து வெளியிட்டு இருக்கிறது ரோலிங் ஸ்டோன் பத்திரிகை. 


 






புது டெல்லியை பிறப்பிடமாக கொண்ட ஜொனிடா காந்தி, பின்னாளில் கனடாவில் குடியேறினார். சுகாதார அறிவியல் மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஜொனிடாவுக்கு சிறுவயதில் இருந்தே பாடுவதிலேயே ஆர்வம். பல்வேறு பாடல்களை பாடி இணையத்தில் பதிவிட்டு வந்த ஜொனிடா காந்தி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடியதின் மூலம் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானுடன் கைகோர்த்த ஜோனிடா காந்தி இந்தி கோச்சடையான், ஓ காதல் கண்மணி, 24, காற்று வெளியிடை உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.


 






அந்த வகையில் இவர் பாடிய  ‘மெண்டல் மனதில்'  'மெய் நிகரா’,  ‘அழகியே’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும்  எகிடுதகிடு ஹிட் ரகம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் முக்கியப்பாடகியாக வலம் ஜோனிடா, அனிருத் இசையில் பாடிய  ‘செல்லம்மா’,  ‘அரபிக்குத்து’ போன்ற பாடல்கள் உலக அளவில் ஹிட் அடித்து ட்ரெண்டிங் பாடலாக அமைந்திருக்கின்றன.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப்படங்களையும் வெளியிடும் ஜோனிடா காந்தி விக்னேஷ் சிவன் நயன் தாரா தயாரிப்பில் உருவாகும் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  முன்னதாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்காக ரோலிங் ஸ்டோன் பத்திரிகையின் அட்டைப் படத்தில் பாடகர் அறிவு புகைப்படம் இடம் பெறாமல் ஷான் வின்செண்ட் டீ பால் மற்றும் பாடகி தீ ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு  பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறிவின் புகைப்படம் மீண்டும் ரோலிங் ஸ்டோன் இதழில் இடம் பெற்றது.