கான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரு படத்திற்கு வழங்கப்படும் அதிகபட்சமான பாராட்டு என்றால் பார்வையாளர்கள் சரியாக ஏழு நிமிடங்கள் எழுந்த நிலையில் கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள்.இந்த வருடம் இந்த பாராட்டுக்களை அவர்கள் ஜானி டெப்பிற்கு வழங்கியிருக்கிறார்கள். ஒரு நடிகர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் தனது நடிப்பிற்காக பாராட்டு பெறுகிறார்.
சர்வதேச கான் திரைப்பட விழா இன்று ஃப்ரன்சில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படமான ஜீன் து பேரி என்கிற படம் முதல்முறையாகத் திரையிடப்பட்டது. இந்த படத்தை கண்ட ரசிகர்கள் ஏழு நிமிடம் எழுந்த நிலையில் கைதட்டல்களை வழங்கி அவரைப் பாராட்டியுள்ளார்கள்.கடந்த ஏழு ஆண்டுகளில் ஜானி டெப் பெறும் முதல் பாராட்டு இது.
ஜானி டெப் மற்றும் அவரது மனைவியான ஆம்பர் ஹெர்ட் ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக ஜானி டெப் மீது வழக்கு தொடுத்தார் ஆம்பர்,இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. மேலும் ஹாலிவுட் திரைப்படங்களில் ஜானி டெப் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணத்தால் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்தத் திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார் அவர்.கடந்த ஆண்டு ஜானி மற்றும் ஆம்பருக்கு இடையிலான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜானி குற்றமற்றவர் என்றும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு முடிந்து ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் ஜானி டெப் நடித்திருக்கும் வரலாற்றுத் திரைப்படம் ஜீன் து பேரி. இந்தப் படத்தில் பதினைந்தாவது கிங் லூயிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜானி.
இதனைத் தொடர்ந்து ஜானி டெப் இடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.ஹாலிவுட் தன்னை கைவிட்டதாக தான் உணர்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜானி “என்னை ஹாலிவுட் கைவிட்டதாக நான் உணரவில்லை ஏனென்றால் நான் ஹாலிவுட் பற்றி நினைப்பதே இல்லை. ஹாலிவுட்டின் தேவை எனக்கு இருப்பதாகவும் நான் கருதவில்லை” என்று பதிலளித்தார்.
மேலும் அவர் “இங்கு தன்னுடைய இயல்போடு இருக்க நினைக்கும் ஒருவரால் அப்படி இருக்க முடிவதில்லை. ஒரே விஷயத்திற்காக அனைவரும் ஓடும் ஓட்டத்தில் நாமும் விருப்பமின்றி சேர்ந்துகொள்கிறோம். உங்களுக்கு அப்படியான ஒரு ஆள்தான் வேண்டுமென்றால் நீங்கள் அங்கே செல்லுங்கள் நான் வேறு எங்காவது சுற்றிக் கொண்டிருப்பேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் ஜானி.
”கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்ட , பார்த்த , படித்த அனைத்துச் செய்திகளும் மிக அற்புதமாக அபாண்டமாக எழுதப்பட்ட கற்பனைகளே” என தெரிவித்தார் ஜானி டெப்.