சென்னை பசுமை விமான நிலையம் ( Chennai Parandur Airport )


சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம் மக்கள் ( parandur airport protest )


ஆரம்பம் முதலே அதிக அளவு பாதிப்பு ஏற்படும் என கூறப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாலை மற்றும் இரவு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது, 296 வது நாள்  எட்டியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில், "ஏரோட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா” என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




ஒப்பந்தப்புள்ளி


இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்கு தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, டிட்கோ நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில் ஒப்பந்தம் கோரியது. இரண்டு முறை ஒப்பந்தப்பு புள்ளிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தை விரைவில் தேர்வு செய்து, அறிக்கை அளிப்பதற்கான பணி ஆணை வழங்கப்படும் என கடந்த மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தது.


பணிகளை விரிவாக முடிக்க நடவடிக்கை 

 

இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோராயமாக பரந்தூர் விமான நிலையம் அமையப்பட உள்ள இடங்களில்,  நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்  நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை விரைவாக முடிக்க பணிகளை அதிகாரிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டாலும், அதற்கான எல்லைகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை, நீர்நிலை தன்மை குறித்து ஆராய்ந்த பிறகு அதன் எல்லைகள் உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன